ஷங்கர் - ரஜினி இணைப்பில் '2.0' திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி ஜனவரி 25, 2018ம் ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கிராபிக்ஸ் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடைபெற்றது. இதில் ரஜினி சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. விரைவில் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் துவங்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், லைகா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம், "தீபாவளி வெளியீட்டிலிருந்து '2.0' பின்வாங்கி, ஜனவரி 25, 2018ல் வெளியாகும். உலக தரத்தில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவே இந்த மாற்றம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று '2.0' கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பணியாற்றி வரும் குழுவினரிடம் விசாரித்த போது, "'2.0' மாதிரியான கதைகளங்களுக்கு இன்னும் காலதாமதமாகும். ஆனால், நாங்கள் மிகவும் வேகமாக பணியாற்றி வருகிறோம். முதலில் இப்படம் 3டி கேமிராவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
அக்காட்சிகளை எடிட்டிங் செய்வதற்கோ, எப்படி வந்துள்ளது என பார்ப்பதற்கோ நீங்கள் 3டி க்ளாஸ் உபயோகித்து தான் பார்க்க வேண்டும். கிராபிக்ஸ் காட்சிகளை 3டி தொழில்நுட்பத்துக்கு தகுந்தாற் போன்று செய்து வருகிறோம். முழுக்க 3டி என்பதால் இன்னும் காலதாமதமாகும் என்பதாலேயே வெளியீடு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3டி திரையரங்குகள் மிகவும் குறைவு என்பதால் 2டி தொழில்நுட்பத்திலும் இப்படம் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி செய்தால் 3டி தொழில்நுட்பத்திலிருந்து 2டி-க்கு மாற்றும் போது சில சிக்கல்கள் ஏற்படும். அதனையும் சரி செய்ய வேண்டும்.
இந்தியாவில் தயாராகும் முதல் 3டி படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட எந்ததொரு இடத்திலும் தவறு நடந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் ஷங்கர். ஆகையால் நவம்பர் மாதம் இறுதிவரை கிராபிக்ஸ் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது. டிசம்பரில் முழுமையாக முடிவுற்று, படத்தோடு இணைத்து DI பணிகள் துவங்கப்படும். அதனைத் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு ஜனவரி 25ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இந்த மாதிரியான படங்களுக்கு எல்லாம் சுமார் 4 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்வார்கள். இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் பல்வேறு நாடுகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்கள்.
இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.