ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' படத்தின் ட்ரெய்லர், இந்திய அளவில் 50 லட்சம் பார்வைகளை 24 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளது.
'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'-ல் விடை தெரியவிருக்கிறது.
மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் மார்ச் 16-ம் தேதி காலையில் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழி ட்ரெய்லரும் சேர்த்து சுமார் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இந்தியாவில் உருவான படங்களின் ட்ரெய்லர்களில் 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்தது என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'பாகுபலி 2'.
இச்சாதனை குறித்து இயக்குநர் ராஜமெளலி, "அனைத்து மொழி ட்ரெய்லர்களும் இணைத்து 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. அதிகாரபூர்வமாக ட்ரெய்லர் வெளியிடும் முன்பே, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை. இதற்கு நன்றி என்பது சிறிய வார்த்தை தான்.
திரையுலக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் 'பாகுபலி 2'வை அவர்களுடைய படமாக நினைக்கிறார்கள். நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.