நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது.
‘அவதார்’, ‘டின் டின்’ உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட ‘ஃபோட்டோ ரியலிஸ்டிக் பெர்ஃபாமென்ஸ் கேப்சர்’ தொழில்நுட்பத்தை முதல்முதலாக இந்திய சினிமாவில் ‘கோச்சடையான்’ படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித் துள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் உலக அளவில் 6 ஆயிரம் அரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதுபற்றி இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், ‘‘சினிமா நூற்றாண்டு விழா முடிந்திருக்கும் இந்த வேளையில், இந்திய சினிமாவை அடுத்தகட்டத்துக்கு ‘கோச்சடையான்’ திரைப்படம் கொண்டு செல்லும்.
அதேபோல, இந்தியாவில் மாற்று சினிமா களத்தில் கோச்சடையான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.