தமிழ் சினிமா

சர்ச்சை சூழ்நிலையை சிறப்பாகக் கையாண்டார் ரஜினி: மாதவன் கருத்து

ஸ்கிரீனன்

ரஜினியின் இலங்கை பயண சர்ச்சைக் குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாதவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க அப்பயணத்தை ரத்து செய்துவிட்டார். தற்போது வரை ரஜினியின் இலங்கை பயணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மாதவன் அளித்த பேட்டியில் ரஜினியின் இலங்கை பயண சர்ச்சை குறித்து பேசியுள்ளார். அப்பேட்டியில் மாதவன் கூறியிருப்பதாவது:

"நடிகர்களான நாங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படம் வெளியாவதற்கு முன் சில சமூக பிரச்சினைகள் எங்களுடன் சம்பந்தப்படுத்தப்படுவது நியாயமற்றதாக இருக்கிறது.

திரையில் நீங்கள் என் முகத்தையோ, ரஜினி அவர்கள் முகத்தையோ பார்க்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் 500 குடும்பங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.

ஒருவர் பணக்காரராக இருப்பதற்கு அவரை குற்றம் சுமத்துவது வருத்தத்தை தருகிறது. நான் பணக்காரனாக பிறக்கவில்லை. அடையாளம் இன்றிப் பிறந்து இன்று ஒரு நிலைக்கு உயர உழைத்திருக்கிறேன். நாங்கள் சட்டவிரோதமாக ஏதோ செய்து, வரி செலுத்தாமல் வாழ்ந்தால் எங்களை குற்றம்சாட்டலாம். ஆனால் ஒரு நடிகரின் சம்பாத்தியத்தின் பின்னால் பொறாமைக் கொள்ளக்கூடிய வகையில் எதுவும் இருக்காது என்பதே உண்மை.

நாங்கள் குறிப்பிட்ட முறையில் வாழவேண்டியிருக்கிறது. அதை நாங்கள் விரும்புகிறோம் என்பதால் அல்ல, அது அவசியம் என்பதால். எனக்கு கார் வேண்டாம், பாதுகாப்பு வேண்டாம். நான் தெருவில் இறங்கி நடந்து சென்று காய்கறி வாங்குகிறேன் என்றால் என்னை கும்பல் சூழ்ந்துவிடும். காயம் கூட ஏற்படலாம்.

ரஜினிகாந்த தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார். அது வெளியாகவுள்ளது. அதிக பணம் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது சர்ச்சைக்கு இடம் தரக்கூடாது. படம் தாமதமானாலோ, தள்ளிவைக்கப்பட்டாலோ பலர் பாதிக்கப்படுவார்கள். அவர் சர்ச்சை உருவாக்காமல் சூழ்நிலையை சிறப்பாகக் கையாண்டார் என்றே நினைக்கிறேன்.

அவரது அறிக்கையிலும், ஒரு நடிகனாக, மனிதாபிமான அடிப்படையில் எதிர்காலத்தில் நான் இலங்கை செல்லும்போது அதை அரசியலாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அது எனக்குப் பிடித்திருந்தது" என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

SCROLL FOR NEXT