வழக்கமான சினிமா கல்லூரி, ஓயாமல் “ஃபிகரை மடிப்பது” பற்றியே பேசிக்கொண்டிருக்கும் பையன்கள், அவர்களைக் கண்டும் காணாமலும் அலையவிடும் பெண்கள் என்று தொடங்குகிறது படம். இந்தக் காட்சிகளில் பெண்களை முடிந்தவரையிலும் சிறுமைப்படுத்துகிறார் இயக்குநர் சுசீந்திரன். பைக் இருந்தால்தான் பெண்களுக்குப் பிடிக்கும் என்று கதாநாயகியே சொல்கிறாள். அவளை ரகசியமாகக் காதலிக்கும் பையன் உடனே பைக் வாங்குகிறான். கதாநாயகன் தன் காதலை வெளிப்படுத்திய பிறகு, உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று கதாநாயகி சொல்கிறாள். அவன் தற்கொலை முயற்சியின் மூலம் மிரட்டுகிறான். அவள் உடனடியாகப் பணிந்துவிடுகிறாள்.
பாதுகாப்பற்ற செக்ஸ், கருக்கலைப்பு முயற்சிகள், பெற்றோரின் ஈகோ, காதலர்கள் பிரிவு, அநாதையாகும் குழந்தை என்று பல கட்டங்களைக் கடந்து படம் முடிவதற்குள் களைப்பாகிவிடுகிறது. இத்தனைக்கும் ஒன்றே முக்கால் மணிநேரம்தான் படம். காதலைப் பெற்றோரிடமிருந்து மறைப்பதற்காகச் செய்யும் தந்திரங்களையும் பெண்கள் விடுதிகள் கருக்கலைப்புக்கு ‘உதவி’ செய்யும் விதத்தையும் சித்தரிப்பதில் யதார்த்தம் தெரிகிறது.
எப்படியெல்லாம் “ஃபிகர் மடிப்பது”, மகாபலிபுரம் போய் குஜால் பண்ணுவது என்பதையெல்லாம் விவரிக்கும் இயக்குனர் காதலிப்பதால் உண்டாகும் தீமைகளை கிளைமாக்ஸில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். கடைசி அரை மணிநேர காட்சிகள் ‘மிடில் கிளாஸ் மாதவன்’களின் மனோபாவத்துக்கு நல்ல தீனிபோடுவதாக இருப்பதே படத்தின் பலம். திரையங்கில் நல்ல ரெஸ்பான்ஸ்.
‘பொண்ணு காதலிச்சா அவ்ளோதான்’, ‘பொண்ணப் பெத்தவன் கண்டவன் முன்னால கைகட்டி நிக்க வேண்டியிருக்கும்’ முதலான ‘உன்னதமான’ கருத்துகளையும் , காதலர்களால்தான் நாட்டில் அநாதைக் குழந்தைகள் அதிகரித்துவிட்டன என்கிற புதிய பாதை டைப் மெசேஜையும் மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். படம் முடிந்ததும்.. காதலிச்சா இப்படிதான்.. சூச்சூ என்று உச்சுகொட்டிவிட்டு கலைந்துசெல்கின்றனர்.
பெண்களின் கோணத்தைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
காதலில் விழுவது, காதலைக் கையாள்வது, அதன் பிறகு வரும் நெருக்கடிகளைச் சமாளிப்பது என்று எந்த விஷயத்திலும் பெண்களை கௌரவமாகச் சித்தரிக்காத படம் இது. மேலோட்டமான காதலின் பாதிப்புகளைச் சொல்ல வேண்டும் என்பற்காகப் பெண்களை முட்டாள்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமில்லை.