தமிழ் சினிமா

சூர்யா தேதிகள் கெளதமிற்கு கிடைக்குமா?

செய்திப்பிரிவு

சூர்யாவிற்காக வேறு ஒரு கதை எழுதியிருப்பதாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.

சூர்யா - கெளதம் மேனன் இணைந்து 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு பூஜை போட்டார்கள். ஆனால் பூஜை போட்ட கையோடு, படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' கூட்டணி என்பதால், இவர்களது படத்திற்கு என்று ரசிகர் பட்டாளமுண்டு. 'துருவ நட்சத்திரம்' படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என்று படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக செய்திகள் வெளியாயின.

சூர்யாவும் கெளதம் மேனன் படத்தில் நடிப்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை. தற்போது லிங்குசாமி, நலன் குமாரசாமி ஆகிய இயக்குநர்களுக்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் சூர்யா.

இந்நிலையில் கெளதம் மேனன் “சூர்யாவிற்காக வேறு ஒரு கதையை தயார் செய்திருக்கிறேன். படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறோம். நிறைய கதைகள் கையில் இருக்கிறது. வரும் காலம் நல்லபடியாக அமையும்” என்று ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

லிங்குசாமி, நலன் குமாரசாமி ஆகியோரது படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை சூர்யா தரப்பில் எந்தொரு தகவலையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்கள்.

சூர்யா கால்ஷீட் கிடைக்குமா கௌதமிற்கு?

SCROLL FOR NEXT