தமிழ் சினிமா

சந்தானத்தின் வசனக்காட்சி நீக்கம்!

ஸ்கிரீனன்

'என்றென்றும் புன்னகை' பட டிரெய்லரில் இருந்து சர்ச்சைக்குரிய சந்தானத்தின் வசனக் காட்சிகள் நீக்கம்.

ஜிவா, த்ரிஷா, சந்தானம், ஆண்ட்ரியா, வினய் நடிக்க, அஹமத் இயக்கியிருக்கும் படம் 'என்றென்றும் புன்னகை'. ராம் மற்றும் தமிழ்குமரன் இருவரும் இணைந்து தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சமீப காலமாக சந்தானத்தின் பெண்களை கிண்டல் செய்யும் வசனக் காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அந்த எதிர்ப்புக்கு இப்படமும் தப்பிக்கவில்லை.

படத்தின் டிரெய்லரில், ஒரு இளம்பெண் சந்தானத்திடம், ”5.10க்குப் போலாம்னு இருக்கேன்.” என்கிறார்.

சந்தானம் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு ”ஏன் நல்லாத்தானே இருக்கே? ஐநூறு ஆயிரத்துக்கே நீ போகலாமே?” என்கிறார்.

5 :10 வீட்டிற்கு கிளம்பப் போகிறேன் என்ற பெண்ணிடம் இவ்வாறு கூறுவதா என்று, இசை வெளியீட்டு விழா நடைபெற்ற தினத்தின் இரவில் இருந்ததே, சந்தானத்துக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியது.

படத்தின் டிரெய்லரும் SOUTH SONY MUSIC இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ச்சியாக எதிர்ப்பு கிளம்பவே, டிரெய்லரில் சந்தானத்தின் அவ்வசனக்காட்சிகளை நீக்கிவிட்டு புதிதாக தற்போது பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். படத்திலிருந்தே நீக்கிவிட்டார்களா என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

SCROLL FOR NEXT