தமிழ் சினிமா

மே 16ம் தேதிக்கு தள்ளிப் போகிறதா கோச்சடையான்?

ஸ்கிரீனன்

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16ம் தேதி அன்று 'கோச்சடையான்' படத்தினை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது 'கோச்சடையான்'. செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தினை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருந்தாலும், படத்தின் முதல் பிரதியை தயார் செய்ய இயக்குநர் செளந்தர்யா சீனாவில் சென்றிருக்கிறார். அனைத்து பணிகளும் முடிந்து, முதல் பிரதி முடிந்தவுடன் தான் சென்னை திரும்ப திட்டமிட்டு இருக்கிறாராம்.

இந்நிலையில் 'கோச்சடையான்' வெளியீடு எப்போது என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து வரும் நிலையில், படம் எப்போது என்று விசாரித்தபோது,

"'கோச்சடையான்' படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம், இந்தியில் பல்வேறு படங்களை வெளியிட தீர்மானித்திருக்கிறது.

அதுமட்டுமன்றி, தமிழகத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தினை தற்போது வெளியிட்டால் நன்றாக இருக்காது. தேர்தல் முடிந்து யாருக்கு வெற்றி என்ற அறிவிப்பு மே 16ம் தேதி வெளியாக இருக்கிறது. அன்றைய தினமே, படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.

அதுமட்டுமன்றி, 'எந்திரன்' படத்திற்காக ரஜினிகாந்த் சன் டி.விக்கு மட்டும் பிரத்யேக பேட்டியளித்தார். அது போல 'கோச்சடையான்' படத்திற்காக ஜெயா டி.விக்கு மட்டும் பேட்டியளித்து இருக்கிறார். அப்பேட்டியை எடுத்திருப்பவர் நடிகர் விவேக்.

SCROLL FOR NEXT