புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிக்கவுள்ள 'அண்ணாதுரை' படத்துக்காக தெலுங்கு கற்று வருகிறார் விஜய் ஆண்டனி.
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'எமன்'. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தால் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.
எமன் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'அண்ணாதுரை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. நடிகை ராதிகா தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'அண்ணாதுரை' படத்துக்காக விஜய் ஆண்டனி தெலுங்கு மொழியை கற்று வருகிறார். இதற்காக, வீட்டுக்கு வந்து தெலுங்கு கற்றுக் கொடுக்கும் ஒருவரை நியமித்துள்ளார். 'பிச்சைக்காரன்' மற்றும் 'எமன்' படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், 'அண்ணாதுரை' படத்தின் தெலுங்கு பதிப்பில் அவரே டப்பிங் பேசவும் முடிவு செய்துள்ளார்.
மேலும், அடுத்து நடிக்கவுள்ள படங்கள் அனைத்தையுமே தெலுங்கில் வெளியிட முடிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி.