'2.0' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியின் அக்கறை மிகுந்த பேச்சு குறித்து உதவி இயக்குநர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஏமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முரளி மனோகர்.
'2.0' படத்தில் பணிபுரியும் போது, ரஜினிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் முரளிமனோகர். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"”முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க..?”- என்ற அவரின் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்.
”சீக்கிரம் சார்” திக்குமுக்க்காடி, சமாளிப்பாகச் சொன்னேன்.
“ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..?”- என விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டால் என்னதான் செய்ய முடியும்?!
“ஆமா சார்...” - என என்னையுமறியாமல் சொல்லி வைத்தேன்!
“நல்லாப் பண்ணுங்க... (சில நொடிகள் தன் தாடியைத் தடவி யோசித்துவிட்டு) அவசரப் படாதீங்க... உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு... ப்பா... இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலிங்க... சீக்கிரம் பண்ணுங்க” - அச்சு பிசகாத, மிகைப்படுத்தப்படாத அந்த வார்த்தைகள்!
“சரிங்க சார்” - என மீண்டும் எனக்குள்ளிருந்து தன்னியல்பாக வெளிப்பட்ட குரல்.
எனக்குள்ள அந்த நொடி என்னன்னா, எளிமையாச் சொல்லணும்னா, சீக்கிரம் பண்றதா, அவசரப்படாதீங்கன்னு சொன்னதைக் கேட்கிறதான்னு தெரியாம புரியாம திகைச்சு நின்ன தருணம்.
உண்மையா அவர் பேச்சில இருந்த ஒரு அக்கறையை மட்டும் உணர்ந்தேன்! சிலிர்த்தேன்!!
நன்றிகள் ரஜினி சார்!
ஆயிரமாயிரம் நன்றிகள்; என் குருநாதரும், வழிகாட்டியும், படைப்பாற்றலும், எல்லாத்துக்கும் மேல என் நல விரும்பியுமான, ஷங்கர் சாருக்கு!!!" என்று தெரிவித்துள்ளார் முரளி மனோகர்.