'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கிண்டல் செய்தபோது நான் உணர்ச்சிரீதியாக காயப்பட்டேன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். சில நாட்களுக்கு முன்பு 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
அச்சமயத்தில் ட்விட்டர் தளத்திலும் தொடர்ச்சியாக கருத்துகள் தெரிவிக்காமல் இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பாக தெரிவித்திருப்பது:
"சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி யாரையாவது தவறாக வழிநடத்துகிறது, தவறான கற்பிதங்களைத் தருகிறது என என்னிடம் யாராவது சொல்லும் நாளில் நான் அதை விட்டு விலகிவிடுவேன். அந்த தொலைக்காட்சி வேறு யாரையாவது வைத்து அந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு பகுதியிலும், பங்கேற்பவர்களின் நலனுக்காக 100 சதவிதம் அக்கறையுடன் நான் இருந்திருக்கிறேன். ஒரு வார்த்தையைக் கூட தவறாக உபயோகிக்கக் கூடாது என 100 சதவிதம் கவனத்துடன் இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்தபோது நான் உணர்ச்சிரீதியாக காயப்பட்டத்துக்கு அதுவே காரணம். இப்போது அதைக் கடந்துவிட்டேன்.
என்னை கிண்டல் செய்தபோது, சொல்வதெல்லாம் உண்மையின் ரசிகர்கள் நான் சரியான பாதையில் செல்வதாக நம்பிக்கை தந்தார்கள். அவர்களின் அன்புக்கு மிகப்பெரிய நன்றி. என்னை கிண்டல் செய்வது, தனிப்பட்ட முறையில் தாக்குவதெல்லாம் என்னை இப்போது பாதிக்காது. லட்சக்கணக்கான மக்களின் ஒப்புதலும், ஆதரவும், எனது நோகத்துக்கும், நிகழ்ச்சியின் தாக்கத்துக்கும் ஒரு சான்று" என்று தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.