பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரெமோ' அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலை ஜூன் 23ம் தேதி இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழு படப்பிடிப்பும் முடிந்து, விரைவில் இறுதிகட்ட பணிகளைத் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இந்நிலையில், 'ரெமோ' அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. அக்டோபர் 7ம் தேதி நவராத்திரி விடுமுறை தினங்கள் இருப்பதால் அந்த தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.