தமிழ் சினிமா

சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்டது பீட்டா அமைப்பு: ஜல்லிக்கட்டுத் தொடர்பாகவும் விளக்கம்

ஸ்கிரீனன்

சூர்யாவிடம் முழுமனதாக மன்னிப்புக் கேட்டது பீட்டா அமைப்பு. மேலும், ஜல்லிக்கட்டுத் தொடர்பாகவும் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்கள்.

ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கக் கோரி தமிழகம் முழவதும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இளைஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுகான தனது ஆதரவு தொடர்பாக நடிகர் சூர்யா, "ஏறுதழுவுதல் என்பது நமது கலாச்சாரத்தோடு, அடையாளத்தோடு சேர்ந்த ஒரு விஷயம். சட்டம் - ஒழுங்கு சேர்ந்து வரலாம். ஆனால், ஜல்லிக்கட்டையே தடை செய்யக் கூடாது" என்று கருத்து தெரிவித்தார்.

சூர்யாவின் இந்தக் கருத்தை பீட்டா உறுப்பினர் நிகுன்ஜ் சர்மா, "ஜல்லிக்கட்டு பிரச்சினையை பயன்படுத்தி சூர்யா தனது சி-3 திரைப்படத்துக்கான விளம்பரத்தைத் தேடுவது மலிவான செயலாகும்" என்று விமர்சித்திருந்தார்.

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை விமர்சித்த பீட்டா அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சூர்யா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டது.

இந்நிலையில், பீட்டா அமைப்பின் நிர்வாக தலைவர் பூர்வா ஜோஷி பூரா சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "நீங்கள் இப்போது கூறுவது சரியென்றால் உங்களது ஜல்லிக்கட்டு ஆதரவுக் கருத்துகளை உங்கள் அடுத்த திரைப்படம் ’சிங்கம் 3’ பட வெளியீட்டுடன் தொடர்பு படுத்தி பேசியதற்கு நாங்கள் முழு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அகரம் அறக்கட்டளையை நீங்கள் நடத்தி வருகிறீர்கள் என்பதும் அதன் மூலம் நலிவுற்ற குழந்தைகளுக்கு சேவையாற்றி வருகிறீர்கள் என்பதையும் நாங்கள் அறிவோம், நலிவுற்ற குழந்தைகளைப் பாதுகாப்பது போல் நாம் விலங்குகளையும் பாதுகாப்பது அவசியம். இதனால்தான் ஜல்லிக்கட்டு பற்றி நீங்கள் மிகவும் நேர்மையாக ஆதரவுக்கருத்துகளைத் தெரிவித்ததை எங்களால் நம்ப முடியவில்லை. ஜல்லிக்கட்டு மனித, விலங்குகள் உயிர்களை பலிவாங்கும் ஒரு கொடூரமான விளையாட்டு. குறிப்பாக இளைஞர்கள் பலியாகின்றனர், திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் பலியானதும் இதனால்தான்.

நாங்கள் நல்லப் படத்திற்கான விளம்பரங்களை ஆதரிக்கிறோம், ஆனால் வாழும் உயிரிகளுக்கு துன்பம் இழைக்கும் எந்த ஒரு விழாவையும் நாங்கள் ஆராதிக்க முடியாது. நீங்களும் இப்படித்தான் யோசித்திருப்பீர்கள் என்று நாங்கள் நினைத்தோம்.

’சிங்கம்’ படத்தில் நீங்கள் நேர்மையான, கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறீர்கள், எனவே விலங்குகளுக்கு கொடுமை இழப்பதைத் தடுப்பது எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் நடிக்கும் இந்த கதாபாத்திரம் உங்களை எங்கள் நடவடிக்கைகளை பாராட்ட வைக்கும் என்று கருதுகிறோம்" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பூர்வா ஜோஷி பூரா.

SCROLL FOR NEXT