ஐஃபா உற்சவம் திரைப்பட விழா சினிமாக் கலைஞர்களை ஊக்குவிக்கிறது என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார்.
ஐஃபா உற்சவம் விருது விழா ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது :-
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் விருது வழங்கும் விழாவாக இது நடைபெறுவது கலைஞர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணம். ஐஃபாவுடன் இணைந்து தெலங்கானா அரசும் இந்த விழாவுக்கு உறுதுணையாக உள்ளது. திரைப்பட கலைஞர்களுக்கு இதுபோல் அரசு அங்கீகாரம் வழங்குவது ஆரோக்கியமான விஷயம். ஐஃபா திரைப்பட விருது விழா அடுத்த ஆண்டு சென்னையில் நடத்த வேண்டும். இதற்காக ஐஃபா குழுவினரை அழைக்கிறோம். இது சினிமாக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விழா. எங்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் விழாவாகவே இதை பார்க்கிறோம்!’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராணா, சிவா, நானீ, நடிகைகள் அக்ஷராஹாசன், லட்சுமி ராய், பிரக்யா ஜெய்ஸ்வால், சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி இயக்குநர் ஆன்ட்ரே திம்மன்ஸ், தெலங்கானா சுற்றுலா மற்றும் கலாச்சார துறை செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.