'த்ரிஷ்யம்' படத்தின் எந்த மொழி ரீமேக்கிலும் தான் நடிக்கவில்லை என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. ஜுது ஜோசப் இயக்கிய இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் ரீமேக்காக இருக்கிறது.
'த்ரிஷ்யம்' தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் நடித்து வருகிறார்கள். தமிழில் மோகன்லால் வேடத்தில் கமல் நடிக்க இருக்கிறார். தமிழ் ரீமேக்கை ஜுது ஜோசப்பே இயக்கவிருக்கிறார்.
'உத்தம வில்லன்' படத்தினைத் தொடர்ந்து 'த்ரிஷ்யம்' ரீமேக்கில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இப்படத்தில் மீனா வேடத்தில் சிம்ரன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை சிம்ரன் மறுத்துள்ளார்.
இது குறித்து சிம்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் எந்த மொழியிலும் நான் நடிக்கவில்லை. திரைப்படத் துறையில் என்னுடைய திட்டங்களைப் பற்றி மீடியாவிற்கு சரியான நேரத்தில் சொல்லுவேன், ” என்று கூறியிருக்கிறார்.