பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. .
'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தற்போதே பெரும் விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது சன் தொலைக்காட்சி நிறுவனம். பொதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் தான், படப்பிடிப்பு தொடங்கியவுடன் தொலைக்காட்சி உரிமையை போட்டியிட்டு கைப்பற்றுவார்கள். அந்த நிலைக்கு தற்போது சிவகார்த்திகேயனும் வளர்ந்துள்ளார்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினிமுருகன்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணைந்துள்ளதுதான் இப்படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.
சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்பிரமணியம், எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - யுகபாரதி, கலை இயக்குநர் - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு, கிராபிக்ஸ் - கமலக்கண்ணன், உடைகள் வடிவமைப்பு - அனு பார்த்தசாரதி மற்றும் எகா லக்கானி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்து வருகிறார்.
பொன்.ராம் படத்தைத் தொடர்ந்து, 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.