செப்டம்பர் 9ம் தேதி சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' வெளியாகும் என இயக்குநர் கெளதம் மேனன் அறிவித்திருக்கிறார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை 'ஒன்றாக என்டர்டெயின்மன்ட்' நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு விளம்பரப்படுத்தி வந்தது. ஆனால் ஆகஸ்ட்டில் வெளியாகும் படங்கள் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டாலும், 'அச்சம் என்பது மடமையடா' படக்குழு பொறுமைகாத்தது. செப்டம்பர் வெளியீட்டுக்கு 'அச்சம் என்பது மடமையடா' மாற்றப்பட்டு இருப்பதாக விநியோகஸ்தர்கள் சார்பில் தகவல் வெளியானது.
இந்நிலையில் 'அச்சம் என்பது மடமையடா' வெளியீடு குறித்து "'அச்சம் என்பது மடமையடா' இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாதத்தில் வெளியாகும். தற்போது அனைத்து பணிகள் முடிவடைந்து வருவதால் அறிவிக்கிறோம். வெளியீட்டுக்கு அனைத்தும் தயாராகி வருகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் கெளதம் மேனன்.