ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாக வெளியான செய்தியை நடிகர் விஷால் தரப்பு மறுத்துள்ளது.
அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபோது ரஜினிகாந்த் உட்பட தமிழ்த்திரையுலகில் இருந்து பல நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களில் நடிகர் விஷாலும் ஒருவர். இந்நிலையில், தற்போது விஷால், ஆம் ஆத்மி கட்சியில் இணையப்போவதாக வியாழக்கிழமை செய்தி பரவியது.
‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்காக சென்னையில் படப்பிடிப்பில் இருந்த விஷால் இதை மறுத்ததாக கூறப்படுகிறது. ‘‘இந்த செய்தி எந்த வகையிலும் உண்மை இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. வெளியான செய்திக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை!’’ என்று படப்பிடிப்பு குழுவினரிடம் அவர் கூறியதாக சொல்லப் படுகிறது.