தமிழ் சினிமா

மருத்துவ உலகின் பயங்கர மறுபக்கம் : திகில் கிளப்ப வரும் தமிழ்ப்படம்

செய்திப்பிரிவு

‘பணம், புகழ் மட்டுமின்றி கடவுளாக பார்க்கப்படும் கவுரவமும் மருத்துவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. அப்படிப்பட்ட மருத்துவர்கள் மத்தியில் நேர்மையும் உண்மையும் இல்லாத சில மருத்துவர்களும் உண்டு. நீங்கள் நம்பும் உங்கள் குடும்ப மருத்துவர் வழியாக, அவருக்கே தெரியாமல் கூட சில கருப்பு ஆடுகள் உங்களை சோதனை எலி ஆக்கலாம்’ என்று திகில் கிளப்புகிறார் அறிமுக இயக்குனர் கஸாலி. இவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் ‘ சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தில் மருத்துவ ஆராய்ச்சி உலகின் ஆபத்தான பக்கங்களை கதைக்களமாக்கி இருக்கிறார். அவருடன் ஒரு மினி பேட்டி..

இதே போன்ற ஒரு கதையைத்தான் ‘ஈ’ திரைப்படம் ஏற்கெனவே கையாண்டது. அதிலிருந்து உங்கள் படம் எப்படி வேறுபடுகிறது?

‘ஈ’ மட்டுமல்ல, ‘ஏழாம் அறிவு’ம் கூட ஒருவகையில் மெடிக்கல் த்ரில்லர்தான். ஆனால் நான் என் படத்தில் ‘க்ளினிக்கல் ட்ரையல்’பற்றி சொல்லியிருக்கிறேன். நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு இடையில், கடுமையான தொழில் போட்டி நிலவி வருகிறது. இதற்காக மில்லியன் டாலர்களில் செலவு செய்து, ஆராய்ச்சிக்கு செலவிட்ட பணம் முழுவதையும் கண்டுபிடிக்கும் மருந்தின் விலையில் வைக்கிறார்கள். இதை பணக்கார நாடுகளில் உள்ள மக்கள்தான் முதலில் வாங்கி பயன்படுத்த முடியும். அதற்கு போட்டி மருந்து வந்தால் மட்டுமே கொஞ்சம் விலைகுறையும். இப்படி பணக்கார நாடுகளுக்கும், வளரும் நாடுகளில் மலிந்திருக்கும் நோய்களுக்கும் மருந்து கண்டறிய நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு, ஏழை நாடுகளில் உள்ள மக்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை தோலுரித்துக் காட்டும் படம் இது.

இத்தனை விஷயங்கள் சொல்கிறீர்களே, நீங்கள் மருத்துவத்துறையில் பணியாற்றிவிட்டு சினிமா இயக்க வந்திருக்கிறீர்களா?

இல்லை அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். எழுத்தின் மீது இருந்த காதலால் இதுவரை 50 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் பலர் மருத்துவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், ‘உங்கள் மருத்துவர் உங்களுக்கு சாம்பிள் மருந்து இலவசமாகக் கொடுத்தால், அதில் ரசாயனத்தின் பெயர் எழுதியிருந்தால் மட்டும் சாப்பிடுங்கள். அப்படி இல்லையென்றால் அதைப் பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் மருத்துவருக்கே கூட தெரியாமல் நடத்தப்படும் க்ளினிக்கல் டிரையல்’ என்று எனக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் இதுபற்றி மேலும் சில ஆராய்ச்சிகள் செய்து இப்படத்தை இயக்குகிறேன்.

இதை அறிந்து கொள்வதற்காக பல மருந்து கம்பெனிகளிலும், மருத்துவமனைகளிலும் ஒரு ஊழியனாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். க்ளினிக்கல் டிரையலில் மறைமுகமாக பலிகடா ஆக்கப்பட்டு, மிகக்கொடூரமான பக்க விளைவுகளை சந்தித்த ஒரு இளைஞனை சந்தித்தேன். அவன் வாழ்க்கையிலும் ஒரு காதல் இருந்தது. இதனோடு வணிக அம்சங்களையும் கலந்தே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.

இதை அறிந்து கொள்வதற்காக பல மருந்து கம்பெனிகளிலும், மருத்துவமனைகளிலும் ஒரு ஊழியனாக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். க்ளினிக்கல் டிரையலில் மறைமுகமாக பலிகடா ஆக்கப்பட்டு, மிகக்கொடூரமான பக்க விளைவுகளை சந்தித்த ஒரு இளைஞனை சந்தித்தேன். அவன் வாழ்க்கையிலும் ஒரு காதல் இருந்தது. இதனோடு வணிக அம்சங்களையும் கலந்தே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.

இத்தனை ரிஸ்க் எடுத்து ஒரு படம் பண்ண வேண்டுமா?

இந்தப் படத்தால் முறைகேடாக மருத்துவ உலகில் இயங்குகிறவர்கள் திருந்து கிறார்களோ இல்லையோ. இப்படியொரு உலகம் தங்களைச்சுற்றி இயங்குகிறது என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவே இந்தப் படத்தை இயக்குகிறேன்.

SCROLL FOR NEXT