தொலைக்காட்சி மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சிறு தயாரிப்பாளர்களுக்கு வருமானத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தயாரிப்பாளர் சங்கம். திருட்டு வி.சி.டி ஒழிப்பு, புதிதாக தொலைக்காட்சி நிறுவனம் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பணியாற்றி வருகிறது.
தற்போது தொலைக்காட்சி மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக தினசரியில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்துள்ளார்கள். அதில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டும் இணைந்து கூறியிருப்பதாவது:
"பாடல்கள், படத் துணுக்குகள், பூஜைகள், டீஸர்கள், ட்ரெய்லர்கள், படக்காட்சிகள் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ, தனியார் கேபிள் உரிமையாளர்களுக்கோ, தனி நபருக்கோ, தனிப்பட்ட அமைப்புக்கோ எந்த உரிமையும், உரிமமும் மேலே குறிப்பிட்ட இரு சங்கங்களும் கொடுக்கவில்லை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதியாக தெரியப்படுத்துகிறோம்.
மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் தொலைக்காட்சி நிறுவனங்கள், பாடல்கள், படத் துணுக்குகள், பூஜைகள், டீஸர்கள், ட்ரெய்லர்கள், படங்கள் போன்றவற்றை யாரேனும் ஒளிபரப்பு செய்தாலோ, ஒளிப்பரப்ப செய்ய உதவியாக இருந்தாலோ அவர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அதற்கான தண்டனை கிடைக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டும் இணைந்து உறுதியாக துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.