'கபாலி' பாடல்களின் 30 விநாடிகள் முன்னோட்டம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ருத்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை நாளை (ஜூன் 12) வெளியாகவுள்ளது. இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரம்மாண்டமான விழா எதுவும் இன்றி நேரடியாக யூ-டியூப் தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
மேலும், 'நெருப்புடா' பாடலின் 30 விநாடிகள் மற்றும் ரஜினி பேசும் 30 விநாடிகள் அடங்கிய மற்றொரு பாடல் இரண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இரண்டுக்குமே இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
"நான் வந்துட்டேன்னு சொல்லு. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. 25 வருஷத்துக்கு முன்னாடி போன கபாலி அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்று ரஜினி பேசும் வசனத்தை ரசிகர்கள் ரிங்-டோனாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
'கபாலி' இசை வெளியீட்டை முன்னிட்டு படத்தின் 35 விநாடிகள் அடங்கிய விளம்பர வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.