ரஜினி அல்லது விஜய் நடித்திருக்க வேண்டிய படம் 'முதல்வன்' என்று கூறியுள்ளார் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த்.
'செல்லமே', 'முதல்வன்', 'சிவாஜி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் கே.வி.ஆனந்த். 'கனா கண்டேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அப்படத்தினைத் தொடர்ந்து 'அயன்', 'கோ', 'மாற்றான்' ஆகிய படங்களை இயக்கினார். தற்போது, தனுஷ் நடிக்க 'அனேகன்' படத்தினை இயக்கி வருகிறார்.
கே.வி.ஆனந்த் 'முதல்வன்' படத்தின் போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“டி.வியில் 'முதல்வன்' படத்தை பாத்துகிட்டு இருக்கேன். அந்த படத்தோட ஷூட்டிங்குக்கு போகும்போதெல்லாம் போருக்கு போற மாதிரியே இருக்கும். அண்ணா சாலைல பஸ் மேல இருந்து எடுத்திருக்கோம்.. ஜே ஜேன்னு எக்கச்சக்கமான ஆட்களை வெச்சு நிறைய ஷூட்டிங் பண்ணியிருக்கோம்.
ரஹ்மான், வி.டி.விஜயன், தோட்டா தரணி, கனல் கண்ணன், சுஜாதா, ஷங்கர்னு ஒரு பிரமாதமான டீம். என்னால மறக்கவே முடியாது. 'அழகான ராட்சசி' பாட்டை 15 நாள்லயும், 'முதல்வனே' பாட்டை 6 நாள்லயும் முடிச்சோம்.
'குறுக்கு சிறுத்தவளே' பாட்டுல மனிஷாவை தண்ணில இருந்து வெளியே வர்றமாதிரி ஷுட் பண்ணினோம். கரெக்டா பாட்டுக்கு லிப் சிங் பண்ணி எடுத்தது எல்லாம் இன்னும் ஞாபகத்துல இருக்கு.
அர்ஜுன் நடிச்ச ரோல்ல ரஜினி அல்லது விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம் 'முதல்வன்'. ஆனா என்ன காரணத்துனால அவங்க நடிக்கலைன்னு எனக்கு தெரியல” என்று தெரிவித்திருக்கிறார்.