தமிழ் சினிமா

மீண்டும் தொடங்கப்படும் சண்டக்கோழி 2: பேச்சுவார்த்தையில் சமரசம்

ஸ்கிரீனன்

லிங்குசாமி - விஷால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் சமரசத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'சண்டக்கோழி'. யுவன் இசையமைத்த இப்படத்தை ஜி.கே நிறுவனம் தயாரித்தது. 2005ம் ஆண்டு இப்படம் வெளியானது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் ஈடுபட்டு வந்தார்கள். 'மருது' படத்துக்குப் பிறகு 'சண்டக்கோழி 2'க்கு தேதிகள் ஒதுக்கி இருந்தார் விஷால்.

விஷால் - லிங்குசாமி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் "சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழுக் கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. 'சண்டக்கோழி 2' கைவிடப்படுகிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் அறிவித்தார்.

இந்நிலையில், விஷால் - லிங்குசாமி இருவருமே சந்தித்து பிரச்சினைகளைப் பேசி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் 'சண்டக்கோழி 2' மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கிவிட்டு, 'சண்டக்கோழி 2' படத்தை இயக்குவார் என்று லிங்குசாமிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT