இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள நான்காம் படம், 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்துக்குப் பிறகு ஜி.வி- ஆனந்தி இணைந்து நடிக்கும் படம், 'டார்லிங்' பட இயக்குநர் சாம் ஆண்டன் - ஜி.வி. கூட்டணியில் உருவான படம், படத்தில் நிறைந்திருக்கும் காமெடி நடிகர்கள் பட்டாளம் போன்ற இந்தக் காரணங்களே 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின.
'பாட்ஷா' பட டயலாக்கையே படத்தின் பெயராக வைத்து விட்டார்களே என்று யோசனை வந்தாலும், டைட்டிலுக்கேற்ற நியாயம் படத்திலும் இருக்கும் என்ற எண்ணத்துடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.
கதை: ராயபுரத்தைத் தன் ஆளுமையில் வைத்திருக்கும் சரவணனுக்கு எதிரிகள் அதிகம். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷை மாப்பிள்ளையாக்கி அழகு பார்க்கிறார். அதற்குப் பிறகு சரவணன் என்ன செய்கிறார்? ஜி.வி.பிரகாஷ் யார்? ராயபுரம் யார் கட்டுப்பாட்டில் வருகிறது? என்பது மீதிக் கதை.
ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. ஆனந்தி அழகாக இருக்கிறார். அவ்வப்போது வந்து போகிறார் அவ்வளவுதான். கருணாஸ், யோகி பாபு இருவரும் படம் நெடுகிலும் வந்து சிரிப்பை தூவிச் செல்கிறார்கள். விடிவி கணேஷும், மொட்டை ராஜேந்திரனும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பொன்னம்பலமும், மன்சூர் அலி கானும் கிளைமாக்ஸில் வந்து போகிறார்கள்.
நடிப்பில் கவனம் செலுத்திய அளவுக்கு ஜி.வி., இசையில் கவனம் செலுத்தவில்லை. பாடல்கள் யாவும் படத்தோடு ஒட்டாமலே இருக்கின்றன. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்துக்கு எந்த பலத்தையும் கொடுக்கவில்லை. பாடல்கள் இடை செருகலாகவே இருந்தன.
படம் முழுக்க பல படங்களின் வசனங்களும், காட்சிகளும் அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கின்றன. 'பாகுபலி', 'வேதாளம்', 'துப்பாக்கி'யில் தொடங்கி கடைசியாக 'கபாலி' வரைக்கும் புகழ்பெற்ற பல வசனங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். 'தெறிக்க விடலாமா' என்ற தொனியிலேயே 'தெறிச்சு ஓடலாமா' என்று கேட்டு ஓடுகிறார் ஜி.வி. இதனால் லொள்ளு சபாவின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
லாஜிக் இல்லாமல் படம் காமெடியுடனே பயணிக்கிறது. படத்தில் சரவணனின் வலது கையாக இருக்கும் சார்லியை வைத்து சென்டிமென்டை முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் காட்சிகளில் ஆழம் இல்லாததால் அது சொதப்பலில் முடிகிறது. முதல் பாதியில் வழக்கம் போல பெண்களை கிண்டல் செய்கிறார் ஜி.வி. படம் நெடுகக் கிடக்கும் காமெடிக் காட்சிகள், படத்தை அதன் போக்குக்கு எடுத்துச் செல்கின்றன. கதையை எதிர்பார்க்காமல் நண்பர்களுடன் ஜாலியாகச் சென்று படம் பார்த்தால் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' பிடிக்கலாம்.
மொத்தத்தில் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் இன்னொரு லொள்ளு சபாவாக உள்ளது.