நா.முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் இந்த மேடையில் நான் நின்றிருக்க முடியாது என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்தார்.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சைஷா சைகல், தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வனமகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை திங்க் பிக் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் 50-வது படம் 'வனமகன்' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் 'வனமகன்' படத்தின் ஒளிப்பதிவாளரான திரு, தேசிய விருது வென்றதற்காக கவுரவிக்கப்பட்டார்.
'வனமகன்' இசையை இயக்குநர் பாலா, லைகா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட மறைந்த நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, "நா.முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் இந்த மேடையில் நான் நின்றிருக்க முடியாது. இந்த படத்தில் எழுதிய பாடல்களை முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்கிறேன். பாடல் பதிவின் போது என்னுடன் வந்த என் 7 வயது மகன் சொன்ன வரிகள் சரியாக பொருந்த, அதை ஹாரிஸ் சார் அப்படியே உபயோகப்படுத்தியதற்கு நன்றி" என்று பேசினார்.
இயக்குநர் விஜய் பேசிய போது, "என் முதல் படத்துக்கே ஜெயம் ரவியைதான் தேடிப் போனேன். ஆனால் ஜெயம் ரவியை வைத்து படம் செய்ய 14 வருடங்கள் ஆகி விட்டது. இந்த படத்துக்காக இருக்கிற எல்லா காடுகளையும் தேடிப் போனோம். 'மதராசப்பட்டினம்' படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை முயற்சி செய்தேன். 7 வருடங்களுக்கு பிறகு தான் அந்த வாய்ப்பும் அமைந்திருக்கிறது, அதுவும் அவரது 50-வது படம் என் படமாக அமைந்தது எனக்குப் பெருமை" என்று பேசினார்.
ஜெயம் ரவி பேசிய போது, "நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா விஜய் சாரை சந்திச்ச பிறகு தான், நான் நல்லவன் இல்லை என உணர்ந்தேன். நான் 'வனமகன்' என்றால், இயக்குனர் விஜய் தெய்வ மகன். இனிமேல் சைஷா தேதிகள் கிடைப்பது மிகவும் கடினம். இப்போதே பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். நான் செய்யும் வேலை போரடித்து விடக்கூடாது என்று தான் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதை ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.