தமிழ் சினிமா

கார்ல் மார்க்ஸ் வேடத்தில் ஒரு தமிழர்

மகராசன் மோகன்

மறக்க முடியாத உலகத் தலைவர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் கார்ல் மார்க்ஸ். அவரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று ரஷ்ய மொழியில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இதில் கார்ல் மார்க்ஸ் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்த ஜோ மல்லூரிக்கு கிடைத்துள்ளது. ‘கும்கி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த ஜோ மல்லூரி ஒரு கவிஞரும்கூட.

‘அஞ்சான்’, ‘அப்புச்சி கிராமம்’, ‘மொசக்குட்டி’, ‘இரும்புக்குதிரை’ உள்ளிட்ட 21 படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகரான இவரை சந்தித்தோம்.

‘‘ஒரு கவிஞனாக இங்கே சுழல்வது சுலபம். அது என்னோட வாழ்க்கை. அந்த மொழி வடிவத்தை எப்படி வேண்டுமானாலும் கொடுக்க முடியும். இன்று எழுத வேண்டும் என்றால் நாள் முழுக்க எழுதுவேன். வேண்டாம் என்றால் விட்டு விடலாம். ஆனால் நடிப்பு என்பது வேறு. அது நம்மை முழுக்க ஒரு இயக்குநரிடம் ஒப்படைக்கும் விஷயம். அவர்கள் கையில் ஒரு பொம்மையாக மாறி இருக்க வேண்டும்.

நடிகனாக பயணிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது’’ அடர்ந்த தாடியை வருடியவாரே பேசத்தொடங்கிய அவரிடம் நம் கேள்விகளை வீசினோம்.

நடிகனாக வேண்டும் என்ற விருப்பத்தோடு திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தவர், நீங்கள். இத்தனை ஆண்டு கால இடைவெளிக்குப்பின் தற்போதுதான் அது சாத்தியப்பட்டிருக்கிறது போல?

எல்லா திறமைக்கும் ஒரு வாசல் உண்டு. எனக்கு 24 ஆண்டுக்களுக்குப்பின் ‘கும்கி’ என்ற படத்தின் வழியே அந்த வாசல் திறந்தது. ‘அஞ்சான்’ ஷூட்ல கேமராமேன் சந்தோஷ் சிவன், ‘‘ லேட்டா வந்திருக்கோமேனு பீல் பண்ணாதீங்க. இப்படி ஒரு முகத்தை உனக்கு தருவதற்குத்தான் இந்தக் காலம், கொஞ்சம் டைம் எடுத்திருக்கு. எல்லா கேரக்டருக்கும் பொருந்தும் இந்த முகத்தை காலம் பக்குவப்படுத்தியிருக்கு’ என்றார். இன்று நேரமே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன். ‘கும்கி’ இவ்ளோ பெரிய படிக்கட்டா இருக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது.

ரஷ்யப் படம் ஒன்றில் கார்ல் மார்க்ஸாக நடிக்கிறீர்களாமே?

ஆமாம். கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆவணப் படம் ஒன்றில் அவரது வேடத்தில் நடிக்கிறேன். டெஸ்ட் ஷூட் முடிச்சாச்சு. இந்த படத்துக்காக அவர் குறித்த விஷயங்களை நிறைய படித்தும் சேகரித்தும் வருகிறேன். லண்டன், ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு இருக்கும்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையா?

எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு வயது ஆகிவிட்டது என்று நினைத்திருக்கிறார்கள். எனக்கு 41 வயதுதான். அழகியலாக வாழ்க்கையை பார்ப்பவன், நான். பலத்தின் மீது நம்பிக்கையையும் பலவீனத்தின் மீது திருத்தங்களையும் வைப்பதுதான் வாழ்வின் பலம். நிறைய மேடு பள்ளங்களில் விழுந்திருக்கிறேன். ஆனால் வீழ்ந்ததில்லை. எதார்த்தமாகவும் உண்மை யாகவும் இருந்தபோதும் முதல் திருமணம் விவாகரத்து வரைக்கும் போய்விட்டது. அதெல்லாம் இப்போது வேண்டாம். இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கிறேன். தற்போது பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறேன்.

அடுத்து எழுத்தில் புதிய திட்டம் எதாவது?

‘தமிழாஞ்சலி’ என்கிற பெயரில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதை பெரிய அளவில் வெளியிடத்திட்டம். தமிழை ஒரு உலகப்பயணமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்கிற ஒரு விருப்பமும் உள்ளது. எந்த ஒரு பின்னணியையும் சாராத, தமிழுக்காக மட்டுமே என்று இயங்கும் சொற்பொழிவிற்கு போதுமான ஆள் இங்கே இல்லை. நடிப்பை கேடயமாக வைத்து அந்த பணியைத் தொடரலாம் என்கிற முடிவோடு இருக்கிறேன்.

SCROLL FOR NEXT