இனவிடுதலை கோரி நிற்கும் இலங்கை தமிழ்மக்கள், ஆயுதப்போராட்டத்தைத் தேர்ந்துகொண்டபிறகு, ரத்தம்தோய்ந்த வரலாற்றைத் தங்களுடையதாக வரித்துக்கொண்டார்கள். புலம்பெயர்ந்த தமிழ்சினிமாவோ, தமிழகத் தமிழ்சினிமாவோ, இந்த வரலாற்றைத் திரையில் இதுநாள்வரை ஆவணப்படுத்தவில்லை. குறிப்பாகத் தமிழீழப் போராளிகளுக்கும் - இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான மோதலைக் கதைக்களமாக்கும் படங்கள், சிதறலான முயற்சிகளாகக் கவனம் பெறமுடியால் போயிருக்கின்றன. இதற்குக் காரணம், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணத்துக்குப் பிறகு, தமிழீழம் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசும் படங்களின் மீது, இந்திய வெளியுறவுக்கொள்கையைக் காரணம் காட்டி, மாநிலத் தணிக்கைக் குழு கடுமையான கத்திரிப்புகளைச் செய்து வந்திருக்கிறது. இதனால் தமிழ் வணிகச் சினிமாவில் யாரும் மூச்சுவிடவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் ‘ராவண தேசம்’ என்ற படம் ஒருவகையில் ஆச்சரியம் தருகிறது. இன்னொரு வகையில் அது தனது குரலைத் தணிக்கைக்காக அடக்கி வாசித்திருக்கிறது.
இலங்கையில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தை நினைவுபடுத்தும் விதமாக, போராளிகளுக்கும் ராணுவதுக்கும் இடையே நடக்கும் கடும் சண்டையுடன் கதை தொடங்குகிறது!
நாட்டைத் தமிழர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் நிலை வந்துவிடுமோ என்றெண்ணி போராளிகளையும், அவர்களை நம்பும் மக்களையும் அழிக்கும் வேலையில் முனைப்பாக இருக்கும் ராணுவம் ஒருபக்கம், ராணுவத்தின் பதில் தாக்குதலுக்குப் பயந்து, பிறந்து வளர்ந்த தேசத்தை விட்டு வெளியேறினால், தங்களது எதிர்காலச் சந்ததியினருக்கும் செய்யும் துரோகமாகிவிடும் என நினைத்து , உயிரையே களத்தில் ஆயுதமாக்கும் போராளிகள் மறுபக்கம். இந்த இரண்டு பிரிவினருக்கு இடையே மாட்டிக்கொண்டு, வாழ்வா, சாவா என்ற உறுதியற்ற ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகமாக, யுத்தகளத்தில் கழிக்கும் அப்பாவி தமிழ்மக்களில் பலர், உயிரைக் காத்துக்கொள்ள, கடலுக்கு அந்தக்பக்கம் விடியல் இருக்கும் என நம்பி, படகுகளில் பயணிக்கிறார்கள். அப்படிச்செல்லும் ஒரு குழுவினர் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் உணர்ச்சிப் போராட்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது இந்த ராவண தேசம்.
இதில் காதல், அன்பு, பாசம், தன்னலம் என எல்லா மனித உணர்ச்சிகளையும் படகில் பயணிக்கும் கதாபாத்திரங்கள் வழியாக வெளிப்படுத்தி விறுவிறு காட்சியமைப்புகளோடு, திரைக்கதையைத் தொய்வில்லாமல் கொண்டுசென்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் அஜெய் நூத்தகி. ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவரே இந்தப் படத்தில் நாயகனாகவும் சிறப்பாக நடித்திருக்கின்றார். கதைநாயகி ‘ஈரநிலம்’ நந்திதாவைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். ஈழத்தமிழ் அகதிகளை நினைவூட்டும் துயரம்தோய்ந்த தோற்றத்தில் இருப்பதால் கதாபாத்திரத் தேர்வில் கவனம் கட்டியிருக்கும் இயக்குனர், திரைக்கதையின் உள்ளடக்க ரீதியாக, தணிக்கைக்குப் பிரச்சினை வராத வண்ணம், விடுதலைப்புலிகளின் தலைவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் தலைவர், போரின் இறுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதுபோலச் சித்திரித்து இருக்கிறார்.
ஆனால் கடலில் தத்தளிக்கும் மக்கள் குழுவின் உயிர்ப்போராட்டமே படத்தின் மிகச்சிறந்த பகுதியாக விஞ்சி நிற்கிறது! தமிழகம் நோக்கிய கடல் பயணத்தில் இராணுவக்கப்பல் தென்பட, வாழ்க்கை முடிந்தது என்ற பதட்டத்தோடு படகைச் செலுத்தாமல் உள்ளே பதுங்கிக் கொள்வதில் படகு திசை மாறிப்பயணிக்கிறது. உணவும், நீரும் தீர்ந்து, ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இறந்தவர்களின் உடலை வைத்துக் கொள்ளமுடியாமல் கடலில் விடுகிறார்கள். கைக்குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக உப்பு தண்ணீரைகுடித்துவிட்டு வயிற்று வலியில் கதறும் தாய். கரைசேருவோமா என்பதே தெரியாத நிலையில், காதல் தரும் நம்பிக்கையால் மற்றவர்களைத் தேற்றும் காதலர்கள், காணாமல் போன தன் மகன், தமிழக அகதிகள் முகாமில் இருக்கக்கூடும் என நம்பும் அபலைத் தாய் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உண்மை நிகழ்வுகளில் இருந்து உருவாக்கியது போன்று உணரவைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்து டாக்கீஸ் தீர்ப்பு
இலங்கை இன அரசியல் மீது மேம்போக்கான பார்வை இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கான கச்சிதமான நடிகர்கள் தேர்வு, கதாபாத்திரங்களின் துயரத்தை உணரவைக்கும் காட்சியமைப்புகள், தொய்வில்லாத திரைக்கதை ஆகிய காரணங்களால் ராவணதேசம் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.