தமிழ் திரையுலகில் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாகக் கூடிக்கொண்டே போகும் முன்னணி நடிகர், அஜித். நீங்கள் எந்த ஒரு நடிகையின் பேட்டியை படித்தாலும், அதில் "எனக்கு அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஆசை" என்ற சொற்றொடரைப் பார்க்கலாம். இப்படி அஜித்திற்கு எந்த பக்கம் திரும்பினாலும், அவரது ரசிகர்கள்தான்.
அஜித் படம் என்றால் ஒரு வாரத்திற்கு டிக்கெட் கிடைக்காது. அஜித் நாயகனாக வைத்து படமெடுத்தால், ஒரு வாரத்தில் போட்ட முதலீட்டை எடுத்து விடலாம் என்பார்கள் தயாரிப்பாளர்கள். அந்தளவிற்கு அவருக்கு இருக்கும் மாஸ் ஒப்பனிங்கிற்கு காரணம் அஜித் ரசிகர்கள்.
எல்லா நடிகருமே ரசிகர் மன்றத்தினை கலைத்து விட்டால், ரசிகர்கள் படத்தினை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் என்றைக்கு "நான் எனது ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன். முதலில் குடும்பத்தை கவனியுங்கள்" என்று கூறினாரோ, அன்று முதல் தான் அஜித்திற்கு ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது.
எனக்கு தெரிந்த அஜித் ரசிகர் ஒருவர், அஜித் படம் வெளியாகும் அன்று தொடர்ச்சியாக 4 முறை பார்க்கும் பழக்கமுடையவர். அந்தளவிற்கு அஜித்தின் மீது பாசவெறி.
சமூக வலைத்தளங்களில் ரஜினி, கமல், விஜய் என எந்த ஒரு முன்னணி நடிகரின் பெயருக்கும் இல்லாத கூட்டம் அஜித்திற்கு இருக்கிறது. அஜித்தை பற்றிய செய்தியோ, புகைப்படமோ என எது வெளிவந்தாலும் அன்று ட்விட்டர் தளத்தில் இந்தியளவில் டிரெண்ட்டாகும். அந்தளவிற்கு தங்களது பாசத்தினை வெளிப்படுத்துவார்கள் அஜித் ரசிகர்கள்.
'ஆரம்பம்' பட சமயத்தில் தலைப்பு, டீஸர், டிரெய்லர், சென்சார் நடைபெற்ற தினம் என அனைத்து நாட்களிலும் இந்தியளவில் டிரெண்ட்டானது. இந்தி திரையுலகில் ஷாருக்கான், ஆமீர்கான் உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் வெளியாகும்போது இந்தியளவில் அவர்களது பெயர்கள் டிரெண்ட்டாவது இயல்பு. தென்னந்திய நடிகர்களில் ட்விட்டர் தளத்தில் அடிக்கடி நீங்கள் அஜித் பெயரை மட்டுமே பார்க்க முடியும். அந்தளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்து வைத்திருக்கிறார்.
இந்த ரசிகர்கள் கூட்டத்தை அஜித்தின் நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசாகத்தான் பார்க்கிறேன். எவ்வித வலுவான பின்னணியும் இல்லாலம் படிப்படியாக முன்னேறி, நம்பிக்கைக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது ஒரு பக்கம் என்றாலும், ஓர் உதவி செய்துவிட்டால், உடனே அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, அதை வைத்து பப்ளிசிட்டி தேடிக் கொள்ளும் நபர்கள் மத்தியில் அஜித் செய்து வரும் உதவிக்கு எல்லாம் தினமும் 2 முதல் 3 அறிக்கையாவது வெளியிட வேண்டும். அதுமட்டுமன்றி அஜித்திடம் கறுப்பு பணம் என்பது ஒரு ரூபாய் கூட கிடையாது. படத்தில் நடிப்பதற்காக சம்பளம் வாங்கிய அடுத்த தினத்தில், அதற்கான வரியை செலுத்தி விடுவார்.
சமூக வலைத்தளங்களில் அஜித்திற்கு இருக்கும் மாஸ், வேறு எந்த ஒரு ஹீரோவிற்கும் கிடையாது என்று சொல்லிக் கொள்ளும் அதே வேளையில், சில தவறுகளும் நடக்கின்றன. தன்னைப் பற்றி யார் என்ன கூறினாலும், அதைப் பற்றி எல்லாம் அஜித் கவலைப்படுவதில்லை. ஆனால், அவரது ரசிகர்கள் அப்படியல்ல. அஜித்தைப் பற்றி தவறாக யாராவது கூறிவிட்டாலோ அல்லது சமூக வலைத்தளங்களில் பதிந்துவிட்டாலோ உடனே திட்டி தீர்க்கிறார்கள்.
அவ்வாறு வலி ஏற்படுத்தும்போது, அனைவரும் சொல்வது... 'அஜித் ரசிகர்கள் மோசமானவர்கள்' என்று. அதுமட்டுமறி மற்றொரு நடிகரின் படம், அஜித் படத்தோடு வெளியாகிறது என்றால், அப்படத்தினைப் பற்றி தவறாக பேசுவது, அந்த நடிகரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது, அப்படத்தினைப் பற்றி தவறாக ஹேஷ்டேக் ஒன்றினை உருவாக்கி, அதை இந்தியளவில் டிரெண்ட் செய்வது என தல ரசிகர்கள் சில நேரம் வலி ஏற்படுத்துஅஜித் ரசிகர்களின் பணி மறுபுறம் மிகவும் தவறானது.
அனைவரும் வெளியே கூறிக்கொள்வது, அஜித் நல்ல மனுஷன். ஆனால் அவரது ரசிகர்கள் மோசமானவர்கள் என்று தான். மற்ற நடிகர்களைப் பற்றி அஜித் எப்போதுமே கருத்து கூறுவதில்லை. அது போல அவரது ரசிகர்களும் இருக்கலாமே.
அஜித்தின் பிறந்தநாளான இன்று (மே 1) மற்ற நடிகர்களைப் பற்றி தவறான வார்த்தைகளால் திட்ட மாட்டோம். மற்ற படங்களைப் பற்றியும் பேச மாட்டோம் என்று அவரது ரசிகர்கள் உறுதிமொழி எடுப்பார்களா?
இப்போது கூட இந்தியளவில் #HappyBirthdayThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. அதுவே அஜித் ரசிகர் படைக்குச் சான்று!