கோவா சர்வதேச திரைப்பட விழாவில், 'தங்க மீன்கள்' படத்தின் இயக்குநர் ராம், கதாநாயகி பத்மப்ரியா, தயாரிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு ராம் இயக்கத்தில் வெளியான படம் 'தங்க மீன்கள்'. கெளதம் மேனன் தயாரித்திருந்த இப்படத்தினை, சதீஷ்குமார் வாங்கி வெளியிட்டார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் ‘தங்கமீன்கள்’ படம் நேற்று திரையிடப்பட்டது. மீண்டும் நவம்பர் 29-ம் தேதியும் திரையிடப்பட இருக்கிறது. இந்தியன் பனோரமாவில் திரையிட தேர்வாகியிருக்கும் ஒரே தமிழ்ப்படம் ‘தங்கமீன்கள்’ மட்டுமே.
படம் திரையிடுவதற்கு முன்பாக இயக்குனர் ராம், நடிகை பத்மப்ரியா, தயாரிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
'தங்க மீன்கள்' படத்தில் பெரும் வரவேற்பை பெற்ற “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லையென்று” என்ற வசனத்தினை முதலில் சொல்லி தனது பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் ராம். அதனைத் தொடர்ந்து, “இங்கு தமிழில் பேச ‘தங்கமீன்கள்’ எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது குறித்து மிகுந்த சந்தோஷமடைகிறேன்” என்றார்.