தமிழ் சினிமா

முதல் நாள் அனுபவம் - தலைமுறைகள்

ஸ்கிரீனன்

கிராமத்தில் இருக்கும் தனது தாத்தாவை பார்த்து பேச வேண்டும் என்று நினைக்க வைக்கும் படம் 'தலைமுறைகள்'

கிராமத்தில் இருக்கும் தனது தாத்தாவை (பாலு மகேந்திரா) பார்க்க வருகிறார் பேரன் (மாஸ்டர் கார்த்திக்). தாத்தாவிற்கு ஆங்கிலம் தெரியாது, பேரனுக்கு தமிழ் தெரியாது. இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது தான் ‘தலைமுறைகள்’.

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம், நடிப்பு என அனைத்து விஷயங்களையும் கையில் எடுத்து, அதனை சரியானபடி கையாண்டிருக்கும் பாலுமகேந்திராவுக்கு சபாஷ்.

நடிகர் பாலுமகேந்திரா நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். 'என் பேரன் இங்கிலீஷ்ல பேசுறான்ம்மா' என்று தலையில் அடித்துக் கொள்ளும் இடத்திலும், தாத்தாவை மறந்தாலும், தமிழை மறக்காதே என்று சொல்லும் காட்சியிலும் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார் பாலுமகேந்திரா.

பேரனாக கார்த்திக், தாத்தாவுடன் சேர்ந்துக் கொண்டு இவர் பண்ணும் சேட்டைகளாலும்," நீயும் செத்துப் போயிருவியா தாத்தா " என்று கேட்கும் காட்சியிலும் நம்மை நெகிழ வைக்கிறார்.

கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதும், அதோடு சேர்ந்து தமிழும் அழிந்து வருகிறது என்பதை முகத்தில் அறைந்து கூறுகிறது ‘தலைமுறைகள்’. தாத்தா, பேரன் கதையோடு தமிழ் மொழியை இணைத்து திரைக்கதை அமைத்திருக்கும் பணியில் இயக்குநர் பாலுமகேந்திரா ‘உள்ளேன் ஐயா’

35MMல் படம் எடுத்திருப்பது, குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு காட்சிப்படுத்திருக்கும் நேர்த்தி, ஒளிப்பதிவு கோணங்கள், குறைந்த பட்ஜெட் என பாலு மகேந்திரா படங்களின் அனைத்து அம்சங்களும் ’தலைமுறைகள்’ படத்திலும் தொடர்கிறது.

பாலு மகேந்திராவின் மகன் - மருமகள் இருவரும் எப்போதும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வது, உடம்பு சரியில்லாத போது மாத்திரை கொடுத்ததினால் உடனே மனம் திருந்துவது, மற்றவர் கூறுவதால் உடனுக்குடன் மனம் திருந்துவது என்பது போன்ற காட்சிகளில் இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கிலாம்.

எந்தத் தலைமுறையினரும் பார்க்க வேண்டிய படம் ‘தலைமுறைகள்’.

SCROLL FOR NEXT