தன் தங்கை அக்ஷ்ராவிற்கு தான் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை என்று நடிகர் ஸ்ருதிஹாசன் 'பூஜை' பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் 'பூஜை' திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை விஷால் நடித்து, தயாரித்திருக்கிறார். வேந்தர் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
'பூஜை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன் பேசும்போது, "தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிப்பதால் தமிழில் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. 3 மொழிகளிலும் நடிப்பதால் மும்பையில் தனியாக வசிக்கிறேன். மணிரத்னம் படத்தில் கூட கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
'பூஜை' படத்தில் பாடல்காட்சிகளில் கவர்ச்சியாக ஆடியிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். கவர்ச்சி என்றால் என்ன என்று எனக்கு புரியவில்லை. அந்த பாத்திரத்திற்கு தேவைப்படுவதை செய்திருக்கிறேன்.
என் தங்கை அக்ஷ்ரா, 'ஷமிதாப்' என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவள் திறமைசாலி. அவளுக்கு நான் அட்வைஸ் செய்ய வேண்டியதில்லை. நான் உதடு ஆபரேஷன் செய்து கொண்டதாக செய்திகள் பரவுகின்றன. அதில் உண்மையில்லை.
திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை என்று நான் பேட்டி கொடுத்ததாக தவறான செய்தி பரவுகிறது. நான் அப்படி சொல்லவில்லை. என் கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். அடுத்து தமிழில் சிம்புதேவன் - விஜய் இணையும் படத்தில் நடிக்கிறேன்.
அப்பாவுடன் இணைந்து நடிப்பது பற்றி நீங்கள் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எப்போது ஸ்ருதிக்கும் சான்ஸ் கொடுக்கப் போகிறீர்கள் என்று அப்பாவிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்று கூறினார்.