தமிழ் சினிமா

திருமண சர்ச்சையில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா

செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 3-வது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்தியின் உண்மைத் தன்மை குறித்து குழப்பம் நீடிக்கிறது.

இளையராஜாவின் இளைய மகனும், முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவருமான யுவன் சங்கர் ராஜாவுக்கு 3-வது திருமணம் நடைபெற இருக்கிறது என இணையத்தில் உலவும் தகவல்கள் இதுதான்:

'இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2008-ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அதற்கு பிறகு, ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் யுவன். ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து யுவனை விட்டு ஷில்பா பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

தன் தாயின் மறைவால் மனமுடைந்த யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைத் தழுவினார். தினமும் 5 நேரம் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார்.

இந்நிலையில், யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் நேற்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துபாயில் நடக்கவுள்ளது. ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.'

இதுவே யுவனின் திருமணம் தொடர்பாக பரவிய செய்தி. இது குறித்து யுவனின் அண்ணன் கார்த்திக் ராஜாவிடம் கேட்டபோது, "உண்மைதான். டிசம்பரில் திருமணம் நடைபெறலாம். மற்ற செய்திகள் அனைத்தும் யுவனே கூறுவார்" என்று தெரிவித்தார்.

மேலும், யுவனின் நிச்சயத்தார்த்த விழாவிற்கு குடும்பத்தினர் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் யுவனுக்கு நெருக்கமானவர்கள் என்றால், இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன்தான். இது குறித்து பிரேம்ஜி அமரனைத் தொடர்பு கொண்டபோது, "கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். நானும் நேற்றிரவு இச்செய்தி குறித்து கேள்விப்பட்டுதான் யுவனிடம் கேட்டேன். அவர் அச்செய்தி எல்லாம் பொய். உண்மையில்லை என்று தெரிவித்தார்" என்றார்.

அதற்குள் இணையத்தில் ஜப்ருன்னிஸார் என்ற பெயரில் இஸ்லாமிய பெண் ஒருவரின் புகைப்படத்துடன் திருமணச் செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து யுவன் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை எதுவும் உண்மையில்லை என்பது மட்டும் உண்மை.

SCROLL FOR NEXT