தமிழ் சினிமா

லட்டு தின்ன பிடிக்காது - விஷாகா சிங்

ஆர்.சி.ஜெயந்தன்

அறிமுகப்படமே கலக்கல் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் கதாநாயகிக்கு மள மளவென்று வாய்ப்புகள் குவிவது வழக்கம். ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமான விஷாகா சிங்கை அந்தப் படத்திற்கு பின் பார்க்கவே முடியவில்லை!

“தமிழ்சினிமா பிடிக்கலையா?” என்று தொலைபேசினால்.. “பிடிக்காத கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட வீட்டில் சும்மாயிருப்பது மேல்! அதனால்தான் காத்திருந்தேன். இப்போ நான் எதிர்பார்த்தமாதிரி இரண்டாவது வாய்ப்பு அமைந்துவிட்டது!”என்று அழகான ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்...

புதுப்படத்தில் யாருடன் நடிக்கிறீர்கள்?

“ பவர் ஸ்டார் மட்டும்தான் இல்லை! மற்றபடி லட்டு பட டீம் அப்படியே ஒண்ணா சேர்ந்துட்டோம்! சந்தானம், சேது முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறாங்க. கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இயக்குனராக அறிமுகமாகுறார். படத்துக்குத் தலைப்பு ‘வாலிபராஜா’. படத்தில் என்கூட இன்னொரு நாயகியும் இருக்காங்க.”

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றியை எப்படி ரசிச்சீங்க?

“இந்த அளவுக்கு படம் வெற்றி பெறும்னு நான் எதிர்பார்க்கல. கதை சொன்னப்போ பிடிச்சிருந்தது! ஹீரோ யாருன்னுலெல்லாம் நான் பார்க்கல! இதற்கு நான் முக நூலுக்குதான் நன்றி சொல்லணும். லட்டு பட இயக்குனர் மணிகண்டனோட உதவியாளர் சுஷ்மாவும் நானும் முகநூல் தோழிகள். அந்த படத்துக்கு நடிகை தேர்வு நடந்தப்ப அவங்கதான் என்னோட போட்டோவை இயக்குனருக்கு மெயில் செய்தார். இயக்குனரும் உடனே கூப்பிட்டு ஒகே சொல்லிட்டார்.”

முதல் படத்துலயே ஒரு கெட்ட ஆட்டம் போட்டீங்களே?

“முதல் ஷெட்யூல் முடிஞ்சதும் டைரக்டர் மணிகண்டன் என்கிட்ட தயங்கித் தயங்கி கேட்டார்! நான் சிரிச்சுட்டேன்! ஒரு ஐயிட்டம் நம்பர் இருந்தாத்தான் அது நம்ம இந்தியன் மெயின் ஸ்ட்ரீம் படம். ஆனா இப்படியெல்லாம் நடிச்சும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் உடனடியா வரல. “

பவர்ஸ்டார் பத்தி தெரியுமா?

“படப்பிடிப்பு தொடங்கற வரைக்கும் அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. பிரேக் டைம்ல யூனிட்ல பலபேர் என் பக்கம் திருப்பி ஜொள் விட்டிருக்காங்க! ஆனா பவர் ஸ்டார்கிட்டயிருந்து அப்படியொரு பார்வையே வந்ததில்லை. எனக்கும் அவருக்குமான காட்சிகள் எடுத்தப்போ அவர் என்னைப் பார்த்தாலே எனக்கு சிரிப்பு பிச்சுக்கும். நிறைய ரீடேக் வாங்கினேன். இப்போ அவர் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கார்ன்னு கேள்விப்பட்டப்போ கொஞ்சம் ஷாக் ஆனேன்.”

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தின்னு பல மொழிகள்ல நடிக்கிறீங்க. எதுக்கு முக்கியத்துவம் கொடுப்பிங்க?

“நான் சினிமாவைக் காதலிக்கிறேன். அதனால் மொழி எனக்கு ஒரு பிரச்சினையே இல்ல. வெளிப்படையா சொல்லணும்னா ஹிந்தியில நடிக்கிறது எனக்கு வசதியா இருக்கும்னு நினைக்கிறேன். என்ன இருந்தாலும், தாய் மொழியில பேசி நடிக்கும்போது இருக்குற உணர்வே தனிதான்!”

பாலிவுட்ல நீங்களே படம் தயாரிக்கிறீங்க போல?

“ஆமா! அனுராக் காஷ்யாப்போடு சேர்ந்து ரெண்டு படங்களை நான் தயாரிக்கிறேன். அதுல ஒரு படம் 'பெட்லர்ஸ்’. கடந்த வருடம் கான்ஸ் திரைப்பட விழால பிலிம் கிரிட்டிக்ஸ் பிரிவுல தேர்வாச்சு. மாற்று சினிமாக்களும் வசூல்ல ஜெயிக்கிற காலம் இது. கண்டிப்பா நல்ல முயற்சிகளுக்கு நம்மால முடிஞ்சத செய்யனும்.”

எந்த ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்?

“எனக்கு ஸ்வீட்டே பிடிக்காது. லட்டு சுத்தமா பிடிக்காது. ஸ்வீட் தயிர் மட்டும் சாப்பிட பிடிக்கும்.

SCROLL FOR NEXT