தமிழ் சினிமா

அஜித்துக்கு வாழ்த்து.. ரசிகர்களுக்கு நன்றி: விஜய்

செய்திப்பிரிவு

'வீரம்'’ படத்துக்காக நடிகர் அஜித்துக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்திருக்கும் ‘ஜில்லா’ படத்தின் வசூல் வெற்றிக் கொண்டாட்டம் திங்கள்கிழமை நடந்தது. இதில் நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் மகத், காமெடி நடிகர் சூரி, படத்தை வெளியிட்ட விநி யோகஸ்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் விஜய் கூறியதாவது:

ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். படம் ரிலீஸான அன்று என் நெருங்கிய நண்பர்கள் சிலர் பல தியேட்டருக்கும் போய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை வீடியோ காட்சியாக படம் பிடித்துவந்து என்னிடம் காட்டினார்கள். ரொம்ப டச்சிங்காக இருந்தது. கடுமையான குளிர் என்றுகூட பார்க்காமல் அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் வந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்திருக்கிறார்கள். இப்படி ஒரு கிராண்ட் ஓபனிங் கொடுத்ததற்கு அவர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்.

என்னோடு இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். பட விநியோகஸ்தர்கள் இங்கு மகிழ்ச்சியோடு பேசினார்கள். அவர்கள் ஹேப்பி என்றால் நானும் ஹேப்பிதான். சில பேரோடு நடிக்கும்போது ஒருவித கம்பேக்ட் லெவல் இயல்பா உருவாகும். அது சூரிகிட்ட அமைஞ்சுது. மகத் என் சகோதரராக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் கடந்த ஆண்டு எல்லா படங்களும் ஹிட் கொடுத்தவர். அவருடன் மீண்டும் பணிபுரிவேன்.

பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் ‘வீரம்’ திரைப்படம் நன்றாக போய்க்கொண்டிருப்பதை அறிந்தேன். அஜித்துக்கு வாழ்த்துகள். சிவா உள்ளிட்ட டீம் அனைவருக்கும் வாழ்த்துகள்!

இவ்வாறு விஜய் கூறினார்.

SCROLL FOR NEXT