தமிழ் சினிமா

சிறந்த நடிகை நயன்தாரா : இயக்குநர் சேகர் கம்முல்லா

ஸ்கிரீனன்

வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'கஹானி' படத்தினை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் சேகர் கம்முல்லா இயக்கத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரிலும், தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரிலும் இப்படம் வெளிவரவிருக்கிறது. 'நீ எங்கே என் அன்பே' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் சேகர் கம்முல்லா, நடிகர் வைபவ் மற்றும் இசையமைப்பாளர் மரகதமணி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

'கஹானி' படத்தில் வித்யாபாலன் நிறைமாத கர்ப்பிணி வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், 'நீ எங்கே என் அன்பே' படத்தில் நயன்தாரா கர்ப்பிணி வேடத்தில் நடிக்கவில்லை.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சேகர் கம்முல்லா பேசியது: " வித்யாபாலனை விட, நயன்தாரா சிறந்த நடிகைதான். அவர் இந்த படத்தில் நடித்தது, அதிர்ஷ்டம். கர்ப்பிணியாக நடித்தால் சுலபமாக அனுதாபத்தை சம்பாதித்துவிட முடியும். ஆனால், சாதாரண தோற்றத்தில் ஒரு பெண் நடித்து அனுதாபம் சம்பாதிப்பது, சுலபம் அல்ல. அதில், நயன்தாரா வெற்றி பெற்று இருக்கிறார்.

இப்படத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுக்கவில்லை. நான்தான் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளுக்காகவும் நயன்தாரா பாத்திரத்தை மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினேன்.

'லீடர்' படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் நான் இயக்கவிருப்பதாக வந்த செய்தி வெறும் வதந்தி தான். ஆனால் 'லீடர்' படத்தை தமிழில் எடுத்தால் ரஜினிகாந்துக்கு மட்டுமே அது பொருத்தமாக இருக்கும். நான் ரஜினிகாந்திடம் இதுகுறித்து இன்னும் பேசவில்லை" என்று கூறினார்.

SCROLL FOR NEXT