கடிதம் எழுதி வைத்து விட்டு பிரபல பட அதிபர் தலைமறைவு ஆகிவிட்ட தாக ‘வாட்ஸ்அப்’பில் பரவும் தகவலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன். இந்நிறுவனம் சார்பில் பல திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதில், "வேந்தர் மூவிஸ் மதன் ஐந்து பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த கடிதத்தில் 'காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் குறித்த தகவல்களையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்ற மதன் எங்கு இருக்கிறார், என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. மேலும் போரூரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனத்துக்கும் தனக்குமான தொடர்பு குறித்தும், பண விவகாரங்கள் குறித்தும் அந்த கடிதத்தில் அவர் கூறியிருக்கிறார்" என்று அந்த தகவல் கூறுகிறது.
மதன் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் சார்பில் இதுவரை எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து சிலரிடம் விசாரித்தபோது, "போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வாங்கிய தொகையை திருப்பித் தர முடியாததால் ஏற்பட்ட நெருக்கடியில் மதன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் எழுதி வைத்து சென்றுள்ள கடிதத்தில் கூறியுள்ள படி காசி சென்று, பின்னர் அங்கி ருந்து நேபாளம் வழியாக வெளி நாடு சென்று அங்கு நிரந்தர மாக தங்குவதற்கு அவர் திட்டமிட் டிருக்கலாம்" என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.