அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், 'ஜெயம்' ரவி நாயகனாக நடித்துள்ள 'பூலோகம்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் 'ஜெயம்' ரவி, த்ரிஷா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'பூலோகம்'. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாண் கிருஷணன் இயக்கியுள்ளார். ஜனநாதன் இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'பூலோகம்' தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, ”படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீபாளிக்கு படம் வெளியாகும்” என்று கூறினார். 'ஜெயம் ரவி' இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள 'கத்தி' மற்றும் ஹரி இயக்கத்தில் விஷாலின் 'பூஜை' ஆகிய திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆஸ்கர் ரவிச்சசந்திரனின் பிரம்மாண்ட தயாரிப்பான 'ஐ', முதலில் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்பட்டது ஆனால் தற்போது நவம்பர் மாதமே 'ஐ' வெளியாகும் எனத் தெரிகிறது.