தமிழக அரசியலில் நிலவும் சர்ச்சைக் குறித்து கமல் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து மாதவன் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் விஷயங்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் கமல்ஹாசன். தனது கருத்தை பதிவிட்டு விட்டு, மாதவன் ட்விட்டர் கணக்கை மேற்கோளிட்டு, "தமிழக சர்ச்சை குறித்து பேசவும். நமது குரல் நன்றாகக் கேட்கக்கூடியது. மோசமான அரசியலுக்கு வித்திடாதது. நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் போகலாம் ஆனால் அதை சத்தமாகக் கூறுங்கள்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாதவன், "நாம் எப்போதுமே தமிழ்நாடு எப்படி உலகத்திலேயே சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என பேசியிருக்கிறோம். நமது திறமையையும், ஆற்றலையும் வைத்து உலகுக்கே நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
இந்த மகத்தான ஆற்றலை வழிநடத்த சரியான நோக்கமும், தலைமையுமே தேவை. நாம் சரியான பாதையை நோக்கி செல்ல இதுவே சரியான நேரம். மொத்த மாநிலமும் அதை நம்பவேண்டும்
தங்கள் எண்ணங்களை வெளியே சொல்ல வேண்டும். இந்த சரியான நேரத்தில் அது நடக்கும் என உறுதியாக சொல்வேன். பேசுங்கள் நண்பர்களே. உங்கள் குரல் கேட்கப்படவேண்டிய நேரம் இது" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் மாதவன்.
சிலர் கமலின் ட்விட்டர் கணக்கை யாரோ ஊடுருவிவிட்டார்களோ என சந்தேகித்தனர். அதற்கு கமல் தன்னுடைய ட்விட்டரில் "என்னுடையை டிவிட்டர் கணக்கை யாரும் ஊடுருவவில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை நான் சொல்லவில்லை என்பதால் நான் வாங்கப்பட்டேன் என்றோ என் கணக்கு ஊடுருவப்பட்டது என்றோ ஆகாது. கருத்து வேறுபாடுகள் வரவேற்கத்தக்கவை. உங்களைப் போல் தான் நானும். நான் நான் தான்." என தெரிவித்துள்ளார்.