புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தன் வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களின் வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டார்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர். சென்னையில் பெய்த கனமழை பாதிப்பால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அன்றைய தினம் ‘கபாலி’ படக் குழு வினருடன் கோவாவில் தங்கிவிட்டார்.
இந்நிலையில், ரசிகர்கள் நேற்று புத்தாண்டை ஒட்டி ரஜினியின் சென்னை போயஸ் தோட்ட வீட்டின் முன் கூடினர். அதை அறிந்த ரஜினிகாந்த் காலை 8.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர்களது புத்தாண்டு வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.