தமிழ் சினிமாவில் நிரந்தரமாக இருப்பது மாற்றங்கள் மட்டுமே. ஒரு பத்து வருடத்திற்கு ஒரு முறை சில மாற்றங்கள் வருவது என்கிற நிலைமை மாறி ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமா மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. சில நல்ல மாற்றங்கள, நிறைய சந்தோஷப்பட முடியாத மாற்றங்கள்.
ஐம்பது வருட காலம் தமிழ் சினிமாவில் (1931 முதல் 1980கள் வரை) அனைத்து துறைக்கு ஒருவரே ஆதாரம் என்கிற ஆல் இன் ஆல் அழகுராஜா| நிலைமை இல்லை. ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் இருந்து தன் பங்கைச் சரியாக ஆற்றியதால், மொத்த திரைப்படமும் ஒரு சிறந்த தயாரிப்பாக உருவானது. அத்தகைய ஒரு சூழ்நிலையால்தான் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மற்றும் கந்தசாமி முதலியாரின் மேனகா திரைப்படமும் (முதல் சமூகப் படம்), டி.சி. வடிவேலு நாயகரின் பட்டினத்தார் படமும், எஸ்.எஸ். வாசன் - கந்தசாமி முதலியார் கூட்டணியின் சதிலீலாவதியும, இளங்கோவனின் அம்பிகாவதி, கண்ணகி, சிவகவி மற்றும் திருநீலகண்டர் படங்களும், பி.எஸ். ராமையாவின் குபேர குசேலாவும், கல்கியின் தியாக பூமி மற்றும் மீரா போன்ற திரைப்படங்களும், கி.ரா.வின் நந்தனாரும், பம்மல் சம்மந்த முதலியாரின் சபாபதியும், பேரறிஞர் அண்ணாதுரையின் ஓர் இரவு, வேலைக்காரி மற்றும் நல்ல தம்பி போன்ற படங்களும், கலைஞரின் பராசக்தி, மணமகள், மனோகரா போன்ற படங்களும், ஆரூர்தாஸின் பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே போன்ற பல படங்களும், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் போன்ற பல சிறந்த தயாரிப்புகளும் உருவாகின.
மேலே குறிப்பிட்ட உதாரணமான படங்களை இயக்கியவர்கள் வேறு ஒருவர். கதை எழுதியவர்களின் பெயர்கள் மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளன. ஒரு குழுவாக இத்திரைப்படங்கள் உருவாகி மாபெரும் வெற்றி கண்டன. அக்குழுவில், கதை மற்றும் திரைக்கதை ஒருவர் எழுத, வசனங்களைச் சில படங்களில் வேறொருவர் எழுத, இயக்கத்தை மட்டுமே ஒருவர் செய்தார். அவ்வாறு ஒரு குழுவாக ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது, ஒரு தனி மனித எண்ணம் மற்றும் செயலாக மட்டும் இல்லாமல், ஒரு குழுவின் எண்ணமாக வெளிப்படும்போது, அப்படத்தின் நிறைகள் கூடின.
1980க்குப் பிறகு, அநேக படங்களில், ஒரு திரைப்படம் ஒரு தனி மனிதனைச் சார்ந்தே உருவாக ஆரம்பித்துவிட்டது. இதில் சில நல்ல பலன்கள் இருந்தாலும், அத்தகைய திரைப்படங்கள் ஒரு தனி மனிதனின் எண்ணமாகவே மட்டும் வெளிப்படுகின்றன. அது சில சமயங்களில் பார்வையாளர்களுக்கும் பிடித்துப் போனாலும், அநேக படங்கள் அத்தகைய ஒரு பிடிப்பினைத் தரவில்லை என்பதுதான் இன்றைய நிலைமை. இப்படி எல்லாம் நானே என்ற ரீதியில் உருவாக்கப்படும் படங்களில் வருடத்தில், அதிக பட்சம் 10 சதவீதம் மட்டுமே வெற்றி பெறுவதே அத்தகைய ஒரு முறை மாற வேண்டும் என்பதற்கான அறிகுறி.
நம்முடைய சகோதர மாநில மொழிகளான தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில், ஏன் இந்தி மொழியிலும், தமிழில் 1980கள்வரை இருந்த முறையே இன்றும் பின்பற்றப்படுகிறது, சில படங்களைத் தவிர. அங்கே இன்றும் கதை திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவரும், வசனகர்த்தா என்று ஒருவரும் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் அவர்களுடன் ஒன்றாகப் பணியாற்றினாலும், அவர்கள் ஒரு படத்தை இயக்கும் பணியை மட்டுமே செவ்வனே செய்கிறார்கள். மீதமுள்ள துறைகளில் அவர்கள் அதிகம் பங்காற்றுவதில்லை. இத்தகைய ஒரு தெளிவான அணுகுமுறை, திரைப்படங்களைச் சரியான முறையில் உருவாக்குவதில் உதவி செய்கின்றன.
அதற்காக ஒருவரே கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் செய்வது தவறு என்று கூறவில்லை. ஒருவரே அனைத்தும் செய்ய முற்படும்போது, பலதரப்பட்ட எண்ணங்களும், புதிய அணுகுமுறையும் வர முடியாமல், சகலமும் செய்யும் ஒருவரின் எண்ணங்களாக மட்டுமே ஒரு திரைப்படமாக உருவாவது செம்மையாகாது. ஒரு கோடி மக்கள் பார்க்க வாய்ப்புள்ள ஒரு திரைப்படம், ஒரு தனி மனிதனின் எண்ணமாக மட்டும் இல்லாமல், ஒரு தேர்ந்த குழுவின் எண்ணமாக வரும்போது, செம்மைப்பட்டு, அதனின் தாக்கம், பெரிதாகிறது.
சிங்கிளாக வரும் திறமை சிங்கத்துக்கு இருக்கலாம். ஆனால் சினிமா என்பது இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலை போன்றது. கூட்டணி அமைத்துச் செயல்படுவதே கூடுதலான வலுவைத் தரும்.
(கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள், எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அவர் சார்ந்த நிறுவனத்தின் கருத்துகளாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது.)