ஒரு உல்லாச பயண உணர்வோடு, நான் மிகவும் ரசித்து நடித்த படம் 'பிரியாணி' என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி ஆகியோர் கலவையில் தயாராகியிருக்கும் படம் 'பிரியாணி'. பிரியாணிக்கான பொருட்களை சரியாக கலந்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இது யுவனின் இசையில் வெளிவரும் 100வது படம்.
இப்படம் குறித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு உண்டான அச்சம் எதுவுமின்றி ஒரு உல்லாச பயண உணர்வோடு நான் மிகவும் ரசித்து நடித்த படம் ’பிரியாணி’.
இது முற்றிலும் வெங்கட் பிரபு முத்திரையுள்ள படம். நான், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் எல்லோரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். எனவே நாங்கள் ஒன்று சேர்ந்து படத்துக்காக பணியாற்றும் போது மிகவும் ஜாலியாக பணியாற்றினோம்.
நிஜ வாழ்க்கையில் என்பது போல, அதன் பிரதிபலிப்பாக படம் முழுக்க ஜாலி மூட் இருக்கும். படத்தின் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என்று எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது. பிரியாணியில் என்னுடைய பாடி லாங்வேஜையே முற்றிலும் மாறுபட்ட பாணியில் என்னை நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
ஹன்சிகா படபிடிப்பு வேளையில் சீரியஸாக இல்லாமல் எந்த வித பதற்றமுமின்றி உற்சாகத்துடன் நடித்துள்ளார். மேலும் மண்டி தக்கர் என்ற பஞ்சாப் நடிகை படத்தில் டர்னிங் பாயிண்டான கதாபாத்திரமாக வருகிறார். இவர் வசனங்களை மனப்பாடம் செய்து சொல்லி நடித்த விதம் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளது. என் சீனியர் ஆன ராம்கி அவர்களைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.அவருடைய ரசிகனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.
யுவனுக்கு பிரியாணி 100 வது படம். அவரது பங்களிப்பும் உழைப்பும் படத்தை மேலும் மெருக்கூட்டியுள்ளது. எல்லோரையும் ஈர்க்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக ’பிரியாணி’ அமையும் ” என்று தெரிவித்துள்ளார். டிசம்பர் 2ம் வாரத்தில் இப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.