தமிழ் சினிமா

"காஷ்மீர் போலீஸ் கொடுத்த பாதுகாப்பு": இயக்குநர் விக்ரமன்

ஆர்.சி.ஜெயந்தன்

தாடி படர்ந்த முகத்தில் பளீரென ஒளிரும் புன்னகை, அதற்குள் அப்படியே பத்திரமாக இருக்கும் தோழமை, பேச்சிலும் அடக்கம், அமைதி, பக்குவம். இதுதான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தலைவர் விக்ரமனின் எவர்கிரீன் அடையாளம். ஒரேபாடலில் கதாபாத்திரங்களை முன்னேற்றி விடுகிறார் என்ற கிண்டல் இவர் மீது இருந்தாலும், வாழ்வின் விளிம்பு வரை சென்று தன்னம்பிக்கையின் விரல் பிடித்து மீளும் கதாபாத்திரங்களின் பிரம்மாவாக கொண்டாடப்படுபவர். இயக்குநர் சங்கத்தின் மூலம் உதவி இயக்குநர்களுக்கு புதிய ஊதிய விகிதம், திரைப்படக் கல்வி, குறுபடமெடுக்க வாடகையில்லாத டிஜிட்டல் கேமரா என்று புதுமை படைக்கும் விக்ரமன் திரையிலும் அதே சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருக்கிறார். தற்போது ‘நினைத்தது யாரோ’ படத்தை இயக்கி முடித்திருக்கும் அவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

தமிழ்சினிமா எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

இன்று திறமையான இளைஞர்கள் சினிமாவை நெசித்து இதற்குள் வந்திருக்கி றார்கள். ‘சூது கவ்வும்’ , ‘மூடர் கூடம்’ என்று புதிய தலைமுறை சினிமா வந்துவிட்டது. இந்த மாற்றம் இல்லாவிட்டால் எந்தக் கலையும் செழிக்காது. இந்த மாற்றங்களை எல்லாம் தாண்டி, தற்போதைய சினிமாவின் வெற்றி என்பதே திரைக்கதையில்தான் அடங்கியிருக்கிறது. எத்தனை பெரிய நடிகர் என்றாலும் அழுத்தமான கதையும், அந்தக் கதையோடு ரசிகர்களை ஒன்றவைக்கும் திரைக்கதையும் தான் இன்றைய திரைப்படங்களின் வெற்றியை தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் முன்பு நூறு நாட்களைக் கடந்து படங்கள் ஓடின. இன்று பத்து நாட்கள் ஓடினாலே வெற்றி என்ற நிலை உருவாகியிருக்கிறது. முன்புபோல் குடும்பத்தோடு வந்து திரையரங்கில் படம்பார்த்து மகிழ்ந்த வழக்கம் தற்போது அபூர்வமாகிவிட்டது. இப்போது படம் பார்க்க திரையரங்கு வருகிறவர்கள் இளைஞர்களாகவே இருக்கிறார்கள்.

அதனால்தான் ‘நினைத்தது யாரோ’ படம் முழுக்க இளைஞர்களாகவே இருக்கிறார்களா?

நான் ரசிகனாக இருந்து சினிமாவை ஆழ்ந்து ரசித்து கற்றுக்கொண்டு சினி மாவுக்கு வந்தவன். இதனால்தான் ரசிகர்களுக்கு பிடித்த படங்களை என்னால் எடுக்க முடிந்தது. நான் படம் இயக் காமல் இருந்த நாட்களில் “நீங்க ஏன் படம் இயக்குவதை நிறுத்தி விட்டீர்கள்” என்று என்னை அன்போடு நச்சரிக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்காகவே இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். என் படம் என்றாலே சென்டிமெண்ட், குடும்பம், அதற்குள் காதல் என்ற பாணியை எதிர்பார்த்து வருவார்கள் ஆனால் ‘நினைத் ததுயாரோ’ வில் செண்டிமென்ட் குடும்பம் இரண்டும் இருக்காது. இதில் காதலே முதன்மையாக இருக்கும். ஆனால் இது காதல் கதை இல்லை. காதலைப் பற்றிய கதை. எல்லா தலைமுறையிலும் இளை ஞர்கள் இன்னும் காதலை சரிவரப் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு அழகியல் டிக்ஷ்னரியாக இந்தப் படம் இருக்கும். இதை பார்க்கும் இளைஞர்கள் காலத்திற் கும் தங்கள் இதயத்தில் இந்தப் படத்தை பாதுகாப்பார்கள்.

இந்தப் படத்தின் நாயகனை ஃபேஸ்புக் வழியாகப் பிடித்தீர்களாமே?

ஆமாம்! ஃபேஸ்புக் மூலமாக எனக்கு அறிமுகமானர்தான் ரெஜித். ஃபேஸ்புக் வழியாக வாய்ப்பும் கேட்டார். அவரை அழைத்து ‘ஸ்கிரீன் டெஸ்ட்’ எடுத்து தேர்வு செய்தேன். இவர் மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பெருமே, இயல்பாக நடித்திருக்கிறார்கள். இதை படம்பார்த்து விட்டு நீங்களே சொல்லுவீர்கள்.

படத்தின் கதை என்ன?

ஆறு இளைஞர்கள், வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் உணர்வுகள் விளையாடும் விளையாட்டுதான் கதை

இப்படத்தை காஷ்மீரில் படமாக்கிய அனுபவம் எப்படியிருந்தது?

‘கொஞ்சம் புன்னகை.. கொஞ்சம் காதல்..’ , ‘மனசே லேசா, ரிங்கா ரிங்கா ரோசா’ என்று இரண்டு பாடல்களை காஷ்மீரில் உள்ள ‘பெகல்காம்’ என்ற இடத்தில் படமாக்கினோம். காஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் “வேண்டாம் பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படும்” என்று நண்பர்கள் பயமுறுத்தினார்கள். ஆனால், எந்த பிரச்சனையுமே ஏற்படவில்லை. தமிழ்நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம் என்றவுடன் காஷ்மீர் போலீஸ் தங்களது படையுடன் வந்து பாதுகாப்பு கொடுத்து எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒத்துழைப்பைக் கொடுத்தனர். பத்தடிக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் காஷ்மீர் முழுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து நம்மைப் பாதுகாக்கிறார்கள். எனக்குத் தெரிந்து ரஜினி நடித்த ‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு ‘நினைத்தது யாரோ’ படப்பிடிப்பை நாங்கள்தான் காஷ்மீரில் நடத்தி இருக்கிறோம். நினைத்தது போலவே ‘நினைத்தது யாரோ’ பாடல்கள் மட்டுமல்ல, படமும் பிரமாதமாக வந்திருக்கிறது.

SCROLL FOR NEXT