சிகப்பு, ரோஜாக்கள், ரங்கா உள்ளிட்ட 200 தமிழ் படங்களை டி.வி.டி.யில் வெளியிட தனியார் நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கே.பி.ரவிசந்திரன். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், "மூவி லேண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவனம், ஆண்டவன் கட்டளை, சிகப்பு ரோஜாக்கள், ரங்கா, நீங்கள் கேட்டவை, ஏழை ஜாதி உட்பட 200 தமிழ் திரைப்படங்களின் வி.சி.டி., டி.வி.டி. உள்ளிட்ட பிற காப்புரிமைகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள படங்களை டி.வி.டி., வி.சி.டி.கள் தயாரித்து சென்னை கிண்டியிலுள்ள மாடர்ன் டிஜிடெக் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அம்மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், ‘மனுதாரர் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளதாக கூறப்படும் 200 திரைப்படங்களை வி.சி.டி., டி.வி.டி.களில் வெளியிட வரும் மார்ச் 5ம் தேதி வரை மாடர்ன் டிஜிடெக் மீடியா நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மாடர்ன் டிஜிடெக் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன்‘ என்று கூறியுள்ளார்.