நடிகை பாவனாவிடம் காருக்குள் அத்துமீறி நடந்த விவகாரத்தில் கைதான 3 பேர் மீது பலாத்காரம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. இது தொடர்பாக கேரள டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விளக் கம் கேட்டுள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நடிகை பாவனா தற்போது ஹனிபிடூ படத்தில் நடித்து வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிறகு, கடந்த 17-ம் தேதி இரவு கொச்சிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். ஓட்டுநர் மார்ட்டின் காரை இயக்கினார். அத்தானி பகுதியில் சென்றபோது பாவனாவின் கார் மீது வேன் மோதியது.
வேனில் இருந்த 3 பேர், காருக் குள் அத்துமீறி புகுந்து அவரை பாலியல்ரீதியாக துன்புறுத்திய துடன் வீடியோ மற்றும் புகைப் படமும் எடுத்துக்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் பாலியல் சித்ரவதை செய்த அவர்கள், பாலாறுவட்டம் பகுதியில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வேனில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பாவனா கொடுத்த புகாரின் பேரில், கேரள தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி ஓட்டுநர் மார்ட்டின், வடிவால் சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது (பிரிவு 376) பலாத்காரம் (366), ஆள்கடத்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசா ரணையில், பாவனாவிடம் இதற்கு முன்பு டிரைவராக வேலை பார்த்த பெரும்பாவூரைச் சேர்ந்த சுனில் குமார் இச்சம்பவத்துக்கு மூளை யாக செயல்பட்டது தெரியவந்தது. பாவனா சித்ரவதை செய்யப்பட்ட நேரத்தில் மார்ட்டினிடம் இருந்து, சுனில் குமாருக்கு 60 முறை குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பாவனா வுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
நடிகை பாவனாவை கடத்தி னால் தனக்கு ரூ.60 லட்சம் கிடைக் கும் என்றும் அதில் 30 லட்சத்தை தருவதாக சுனில் குமார் கூறியதா லேயே இந்த சம்பவத்தில் ஈடு பட்டதாக மார்ட்டின் உட்பட மூவரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத் துள்ளனர். இது உண்மையா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இது தொடர்பாக ஏடிஜிபி சந்தியா, குற்ற புலனாய்வு ஐஜி தினேந்திரா கச்யப், மத்திய மண்டல ஐஜி விஜயன் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாவனா விவகாரம் குறித்து கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகராவிடம் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி லலிதா குமாரமங்கலம் விளக்கம் கேட்டுள்ளார். பாவனா வுக்கு ஆதரவாக மலையாள திரையுலகினரும் திரண்டு குரல் கொடுத்தனர். இதனால் போலீஸார் மிகுந்த கவனத்துடன் இந்த வழக்கை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய தொடர்புடைய சுனில் குமார் அம்பலப்புழா பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். சுனில் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பர் அன்வரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் ஜாமீன் கோரி மனு
இதற்கிடையே சுனில் குமார், விஜீஸ், மணிகண்டன் ஆகிய 3 பேர், வழக்கறிஞர் பவுலோஸ் மூலம் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.