தமிழ் சினிமா

விவாகரத்து கோரி நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் ஆகியோர் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் அமலாபால். இவர் கடந்த 2010-ல் ‘வீரசேகரன்’ என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மைனா’, ‘தெய்வ திருமகள்’, ‘சிந்து சமவெளி’, ‘தலைவா’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

‘தலைவா’ படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விஜய்யுடன் அமலாபாலுக்கு காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த 2014-ல் கொச்சியில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்தனர். அதன்பிறகு சென்னையில் இந்து முறைப்படி அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் அமலாபால் திரைப் படங்களில் நடிப்பதைத் தொடர்ந் தார்.

இந்நிலையில் இயக்குநர் விஜய் மற்றும் அமலாபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் கள் விவாகரத்து செய்ய முடி வெடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பரஸ்பரம் விவாகரத்து கோரி நேற்று சென்னை மாவட்ட முதன்மை குடும்பநல நீதிமன்றத்துக்கு தனித்தனி கார்களில் வந்து மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், “கடந்த 2015 மார்ச் 3-ம் தேதியில் இருந்து இருவரும் பிரிந்து வாழ்கிறோம். எனவே எங்களுக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்க வேண்டும்” என்று அவர்கள் கோரியிருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி மரியா கில்டா 6 மாதத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT