முட்டாள் தினத்தை முன்வைத்து, தணிக்கைக் குழுவை கடுமையாக சாடியிருக்கிறார் 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன்.
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மெட்ரோ'. ஜோஹன் இசையமைத்த இப்படத்துக்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்த போது மறுக்கப்பட்டது. தணிக்கை மறுப்பைத் தொடர்ந்து மறுதணிக்கைக்குச் சென்றது 'மெட்ரோ' படக்குழு. மறுதணிக்கையில் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கினார்கள். கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்றால், தொலைக்காட்சி திரையிடலுக்கு என சில காட்சிகளை நீக்கி தனியாக தணிக்கை செய்ய வேண்டும். அதற்கும் தணிக்கை மறுக்கப்பட்டது. இதற்கு இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் முட்டாள்கள் தினத்தை முன்வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சரியாக ஓராண்டுக்கு முன்னதாக, எனது 'மெட்ரோ' படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கை வாரியம் தடை விதித்தபோது நான் முட்டாளாக்கப்பட்டேன். தற்போது அதற்கான டிவி தணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போதும் முட்டாளாக்கப்பட்டுள்ளேன். இரண்டும் தரும் வலி ஒன்றே.
தணிக்கைத் துறை பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் எனது கதை பாணியை மாற்ற வேண்டும். நான் என்னை மாற்றிக் கொள்வதாக இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம். உங்கள் ஆதரவு என்னை வலுவாக்கிறது"என தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன்.
'மெட்ரோ' படத்தைத் தொடர்ந்து, அசோக் செல்வன் இயக்கத்தில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.