தமிழ் சினிமாவின் வழக்கமான 'பழிவாங்கும் கதை'யை, திரைக்கதையால் சுவாரசியமாக்க முயற்சி செய்திருக்கிறார் விஷ்ணுவர்தன்.
ஆர்யாவை கடத்துகிறார் அஜித். எதற்காகக் கடத்துகிறார்? அவரை வைத்து என்ன செய்கிறார்..? இதுதான் 'ஆரம்பம்'.
கதை முழுவதும் மும்பையில் நடக்கிறது. நண்பனின் மரணத்திற்குப் பழிவாங்கல், ஊழல், கருப்புப் பணம் என பல விஷயங்களை 'டச்' செய்து, ஒன்றாகக் கோர்த்திருக்கிறார் இயக்குனர்.
அஜித், ஆர்யா, நயன் தாரா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாப்பாத்திரங்களை அருமையாக செய்திருக்கிறார்கள்.
ஃப்ளாஷ்பேக்கில் அஜித்திற்கு நண்பராக தோன்றும் ராணாவும், ஆர்யாவின் காதலியாக வரும் டாப்ஸியும் சிறிது நேரமே வந்தாலும், மனதில் நிற்கிறார்கள்.
சுபாவின் வசனங்கள், விஷ்ணுவர்தன் - சுபா கூட்டணியின் திரைக்கதை, படம் பார்க்கும் அஜித் ரசிகர்களுக்கு சுவாரசியம் சேர்க்கவல்லவை.
விஷ்ணுவர்தன் இந்தப் படத்திலும் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காட்டியிருக்கிறார்.
இடைவேளை வரை பரபரப்பாக நகரும் ஆரம்பம், அதற்குப் பிறகு சற்றே தடுமாறுகிறது. குறிப்பாக, ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ராணாவின் மரணம், அஜித்தின் குடும்பத்தினர் கொலை, அஜித் இறந்துவிட்டார் என வில்லன்கள் நம்புவது, ஆர்யா மனம் திருந்தி அஜித்திற்கு உதவுவது என எத்தனை படங்களில்தான் இதே மாதிரி காண்பிப்பார்களோ தெரியவில்லை.
படத்துக்குப் பெரிய பலமாக இருந்திருக்க வேண்டிய பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
இடைவேளைக்குப் பின்னர் வரும் சில காட்சிகள்... 'ஆரம்பம்' எப்போதான் 'முடிவு'க்கு வருமோ என்று நினைக்கவைக்கிறது.
அஜித் ரசிகர்களுக்கு ஆக்ஷனும் த்ரில்லரும் சேர்ந்த ஒரு ஸ்டைலிஷ்ஷான 'ஆரம்பம்' தான்.
மற்றவர்களுக்கு... மற்றுமோர் அஜித் ஃபிலிம்.