'ஐ' படத்தைத் தொடர்ந்து '10 எண்றதுக்குள்ள' படத்தையும் விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இந்தி டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 'ஐ' படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பில் இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெற இருக்கிறது.
இசை வெளியீட்டு விழாக்கள் முடிந்தவுடன்தான் படம் எப்போது வெளியாகும் என்று முடிவுசெய்ய இருக்கிறார்கள். தற்போதைக்கு நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று விநியோகஸ்தர்களுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'ஐ' படம் வெளியாகும் தினத்தில் இருந்து, '10 எண்றதுக்குள்ள' படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். 'ஐ' புகைப்படங்கள், பேட்டிகள் என்று வந்து கொண்டிருப்பதால், அதற்கு பிறகு '10 எண்றதுக்குள்ள' விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க இருக்கிறார்கள்.
'10 எண்றதுக்குள்ள' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அக்.20ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. தீபாவளி அன்றும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு சண்டைக் காட்சியும், பாடல்களும் மட்டுமே பாக்கி இருக்கிறது. அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.