பாடகர் யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளதால், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளைத் தொடர்ந்து மத்திய அரசு, பாடகர் யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், "என் தாய்மொழி இசை, என் குருநாதர் யேசுதாஸ்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு யேசுதாஸுக்கு பாதபூஜை செய்தார். இந்நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது பாடகர் யேசுதாஸுக்கு பத்ம விபூஷண்விருது அறிவிக்கப்பட்டது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் "எனது அண்ணா யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் கவரவம் அளிக்கப்பட்டுள்ளது. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அண்ணா. அடுத்த கட்டம் வெகு தூரத்தில் இல்லை. எனது சகோதரரைக் குறித்து தேசம் முழுவதும் பெருமைப் பட வேண்டும்" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து யேசுதாஸ், "என்னை பொறுத்தவரையில் விருதுக்காக பாடியது கிடையாது. அதே சமயம் கடவுள் அருளால் கிடைக்கிற மரியாதையை மறுப்பதில்லை. எனவே, கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.