என் குடும்பத்தில் ஒருவர் ஆர்யா என 'அமர காவியம்' இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா தெரிவித்தார்.
ஆர்யா தயாரிப்பில் ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் 'அமர காவியம்' படத்தில் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் இசையினை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். இயக்குநர் பாலா, நாயகன் சத்யாவிற்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்தை தெரிவித்தார்.
தான் நாயகியாக நடித்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட வாராத நயன்தாரா, இப்படத்தின் இசையினை வெளியிட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இவ்விழாவில் நயன்தாரா பேசியது, "ஆர்யா எனது குடும்பத்தில் ஒருவர். அவரது நட்பிற்காகவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன். படத்தில் நடிக்கும் அனைவரையுமே ஆர்யா நன்றாக கவனித்துக் கொள்வார். மேலும் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களை ஏற்கனவே பார்த்துவிட்டேன். படக்குழுவிற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.
த்ரிஷா பேசியது, "ஆர்யா என்னை போனில் அழைத்த போது, நயன்தாரா கலந்து கொள்கிறார் என்று கூறினார். அப்போது உண்மையாகவா என்று கேட்டேன். அவர் வருகிறார் என்றால் நானும் வருகிறேன் என்று கூறினேன். மற்றவர்களிடம் ஆர்யா எப்படியோ என்று எனக்கு தெரியாது. ஆனால், ஆர்யா என்னிடம் வழிந்தது கிடையாது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
பார்த்திபன் ருசிகரம்
எப்போதுமே இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேச்சு சுவாரசியமாக இருக்கும். இந்த இசை வெளியீட்டு விழாவும் அதில் இருந்து தப்பவில்லை.
இவ்விழாவில் பார்த்திபன் பேசியது, "மத்தியில் 282 எம்.பிக்களும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தாலும், அவர்கள் கலந்து கொள்ளும் விழாவில் நயன்தாரா மற்றும் த்ரிஷாவை ஒரே மேடையில் பார்க்க முடியாது. இவர்கள் இருவரையும் ஒரு விழாவிற்கு அழைத்து வர ஆர்யாவால் மட்டுமே முடியும்.
ஒரு முறை FAST TRACK கால் டாக்சியில் போய் கொண்டிருக்கிறேன். அப்போது டாக்சி டிரைவர் 'எனது சொந்த வண்டியினை FAST TRACKல் இணைந்திருக்கிறேன். காரணம், சரியான நேரத்தில் பிக்கப் மற்றும் டிராப்' செய்து இவர்கள் மட்டுமே என்று கூறினார். அதற்கு எங்கள் ஆர்யா பற்றி உங்களுக்கு தெரியாது. எப்போது பிக்கப் செய்வார் என்றே தெரியாது. டிராப் பண்ணாமல் பிக்கப் பண்ண FAST TRACK-யால் முடியாது. ஆனால் ஆர்யாவால் முடியும். இந்த படத்திற்கு ஆர்யா காவியம் என்று தலைப்பிட்டு இருக்கலாம்" என்று கூறினார்.